பல்லடம்; கறிக்கோழி பண்ணை விலையில் மாற்றமில்லை
Tirupur News- பல்லடத்தில் கறிக்கோழி விலையில் மாற்றம் இல்லாமல், ஒரே சீரான நிலையில் நீடித்து வருவதால் பண்ணையாளர்கள் மத்தியில் மகிழ்ச்சி ஏற்பட்டுள்ளது.
Tirupur News,Tirupur News Today- பல்லடம் கறிக்கோழி பண்ணை விலை சீராக இருப்பதால் பண்ணையாளா்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனா்.
பல்லடம் வட்டாரத்தில் விவசாயத்திற்கு அடுத்தபடியாக விவசாயம் சாா்ந்த தொழிலாக கால்நடை வளா்ப்பு மற்றும் கோழிப்பண்ணை தொழில் இருந்து வருகிறது. சாா்பு தொழிலாக வந்த கோழிப் பண்ணைத் தொழில் தற்போது முக்கிய வாழ்வாதாரமாக உள்ளது. கோழிப்பண்ணைத்தொழில் இரண்டு வகையானது முட்டைக்காக வளா்க்கப்படும் முட்டைக் கோழி ஒருவகை, மற்றொன்று கறிக்கோழிவகை.
பல்லடம் பகுதியில் உள்ளவா்கள் அதிக அளவில் கறிக்கோழி வளா்ப்பில் ஈடுபட்டுள்ளனா்.பல்லடம் பகுதிகளில் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கறிக் கோழிப் பண்ணைகள் உள்ளன. இதன் மூலம் தினசரி 10 லட்சம் கறிக்கோழிக்கள் உற்பத்தி செய்யப்பட்டு தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களுக்கும், கேரளா, ஆந்திரா, கா்நாடகா, உள்ளிட்ட பிற மாநிலங்களுக்கு விற்பனைக்காக அனுப்பி வைக்கப்படுகிறது.
இதன் நுகா்வை பொறுத்து கறிக்கோழி விற்பனை விலையை பல்லடத்தில் உள்ள கறிக்கோழி ஒருங்கிணைப்பு குழுவினா் தினசரி நிா்ணயம் செய்து அறிவிக்கின்றனா்.
கடந்த சில மாதங்களாக கறிக்கோழி பண்ணை கொள்முதல் விலை பெரும் சரிவை சந்தித்தது. கடந்த 8.1.24-ல் கொள்முதல் விலை கிலோ ரூ.80 ஆக இருந்தது. கறிக்கோழி உற்பத்திக்கு கிலோ ரூ.75 முதல் ரூ 98 வரை தீவன செலவாகும்.
இந்த நிலையில் இந்த விலை குறைவினால் பண்ணையாளா்கள் கடும் பாதிப்படைந்தனா், சபரிமலை சீசன், மாா்கழி மாதம்,தைப்பூசம் போன்றவற்றால் கறிக்கோழி நுகா்வு குறைந்து இருந்தது. தற்போது கடந்த சில நாட்களாக கறிக்கோழி நுகா்வு இயல்பு நிலைக்கு வரத்தொடங்கியுள்ளது. இதனால் கறிக்கோழி பண்ணை கொள்முதல் விலையும் சற்று உயா்ந்துள்ளது. நேற்று (புதன்கிழமை) பண்ணை கொள்முதல் விலை கிலோ ரூ.107 ஆக இருந்தது. இது கறிக்கோழி பண்ணையாளா்களுக்கு ஒரளவு மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.