திருப்பூர் சைமா சங்கத்தில் வருமானவரி சட்டம் குறித்த விழிப்புணர்வு கருத்தரங்கு
Tirupur News- திருப்பூர் சைமா சங்கத்தில் வருமானவரி சட்டம் குறித்த விழிப்புணர்வு கருத்தரங்கு நடந்தது.
Tirupur News,Tirupur News Today- குறு, சிறு நிறுவனங்கள், மூலப்பொருள் வினியோகம் மற்றும் சேவைக்கு, 45 நாட்களுக்குள் பணம் செலுத்த வேண்டும் என்ற சட்டம் நடைமுறையில் உள்ளது.
இந்நிலையில், வருமானவரிச்சட்டம் 43 பி (எச்) ன்படி, வரும் நிதியாண்டில் இருந்து, செலுத்தப்படாத கட்டணம், வருமானமாக கருதி வரி விதிக்கப்படும் என்று பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது. திருப்பூர் சைமா சங்கம் சார்பில், இதுதொடர்பான விழிப்புணர்வு கருத்தரங்கு நேற்று, சங்க கூட்டரங்கில் நடந்தது.
கூட்டத்துக்கு, சங்க தலைவர் ஈஸ்வரன் தலைமை வகித்தார். பொதுசெயலாளர் கோவிந்தப்பன் வரவேற்றார். பொருளாளர் சுரேஷ்குமார் முன்னிலை வகித்தார். துணை தலைவர் பாலசந்தர், புதிய அறிவிப்பு தொடர்பாக பேசினார்.
ஈஸ்வரன் பேசுகையில்,''திருப்பூர் பனியன் தொழில், தற்போது மிகுந்த சவால்களை சந்தித்து வருகிறது. இக்கட்டான இந்நிலையில், பண பட்டுவாடா தொடர்பான புதிய உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. குறு, சிறு தொழில்களை பாதுகாக்கும் நோக்கில் அறிவிக்கப்பட்டுள்ளது. பனியன் உற்பத்தி நிறுவனங்கள் விழிப்புணர்வு பெற்று, புதிய விதிமுறைகளை பின்பற்ற வேண்டும்,'' என்றார்.
ஆடிட்டர் நடராஜன் பேசியதாவது:
எம்.எஸ்.எம்.இ., உதயம் திட்டத்தில் பதிவு செய்துள்ள குறு, சிறு நிறுவனங்கள், புதிய விதிமுறையை பின்பற்ற வேண்டும். தங்கள் பொருள் உற்பத்திக்காக பெறும் மூலப்பொருள் மற்றும் சேவைகளுக்கு, 15 நாட்களுக்குள் கட்டணம் செலுத்த வேண்டும்; இருதரப்பு ஒப்பந்தம் இருந்தால், 45 நாட்களுக்குள் செலுத்தலாம்.
கொடுக்க வேண்டிய கட்டணத்தை, 45 நாட்களுக்குள் கொடுக்காத பட்சத்தில், அதை செலவினமாக கணக்கில் சேர்க்க முடியாது.; மாறாக, வருவாயாக கருதி, 30 சதவீதம் வரை வருமான வரி செலுத்த நேரிடும். பெற்ற சரக்கில் ஏதாவது குறைபாடு இருந்தால், 15 நாட்களுக்குள் தகவல் தெரிவித்து, சரிசெய்து பெற வேண்டும். காலக்கெடு, சரக்கு அனுப்பிய நாளில் இருந்து கணக்கில் எடுக்கப்படாது; சரக்கை பெற்ற நாளில் இருந்து கணக்கிடப்பட வேண்டும். அதேபோல், காசோலை வழங்கினால், பணம் பெறும் வரை காத்திருக்க வேண்டியதில்லை; காசோலை கொடுத்த நாளையே கணக்கில் எடுக்கலாம்.
இவ்வாறு, அவர் பேசினார்.
ஆடிட்டர் ராமு பேசுகையில்,''பனியன் நிறுவனங்கள், மூலப்பொருள் அல்லது சேவை பெறும் குறு, சிறு நிறுவனங்கள் கணக்கை தனியே பராமரிக்க வேண்டும். குறு, சிறு நிறுவனமா என்பதை கேட்டறிந்து, 'பில்' தயாரிக்கப்பட வேண்டும். ஒவ்வொரு நிதியண்டின் இறுதியில், பல்வேறு பிரச்னையை சந்திக்க வேண்டியிருக்கும் என்பதால், முன்கூட்டியே தயாராக வேண்டும். விற்பனையாளரிடமும் விரைவில் பணத்தை பெற முயற்சிக்கலாம்,'' என்றார்.
அரசு சலுகை கிடைக்காது!
குறு, சிறு நிறுவனங்களுக்கு, 45 நாட்களுக்குள் செலுத்தும் உத்தரவு கட்டாயம் இல்லாதபட்சத்தி்ல் வருமான வரியாக கணக்கிடப்படும். குறு, சிறு நிறுவனம் இல்லை என்று சான்று கொடுத்து, இந்த கட்டுப்பாடின்றியும் வர்த்தகம் செய்யலாம்; ஆனால், குறு, சிறு நிறுவனங்களுக்கான மத்திய, மாநில அரசு சலுகையை பெற முடியாது. குறு, சிறு தொழில் பாதுகாப்புக்காகவே, மத்திய அரசு இந்த சட்டத்தை இயற்றியுள்ளதாக, ஆடிட்டர்கள் தெரிவித்தனர்.