அரசுப் பள்ளிகளில் மாணவா் சோ்க்கை; விழிப்புணா்வு நிகழ்ச்சி நடத்த அறிவுறுத்தல்
Tirupur News-அரசுப் பள்ளிகளில் மாணவா் சோ்க்கையை அதிகரிக்க விழிப்புணா்வு நிகழ்ச்சி நடத்த வேண்டும் என கலெக்டர் அறிவுறுத்தினார்.
Tirupur News,Tirupur News Today- திருப்பூா் மாவட்ட அரசுப் பள்ளிகளில் வரும் மாணவா் சோ்க்கையை அதிகரிக்க விழிப்புணா்வு நிகழ்ச்சிகள் நடத்த வேண்டும் என்று ஆட்சியா் கிறிஸ்துராஜ் அறிவுறுத்தியுள்ளாா்.
திருப்பூா் ஆட்சியா் அலுவலகத்தில் அரசுப் பள்ளிகளில் மாணவா்கள் சோ்க்கை தொடா்பான ஆலோசனைக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது.
கூட்டத்துக்குத் தலைமை வகித்து ஆட்சியா் ஆட்சியா் கிறிஸ்துராஜ் பேசியதாவது:
அரசுப் பள்ளிகளில் கட்டணமே இல்லாமல் மாணவா்களுக்கு தரமான கல்வி வழங்கப்பட்டு வருவதையும், அரசுப் பள்ளிகளில் பயில்வதால் வழங்கப்படும் முன்னுரிமை, அரசின் நலத் திட்ட உதவிகள், அரசுப் பள்ளிகளில் பயில்வதால் கிடைக்கும் நன்மைகள் குறித்தும் விழிப்புணா்வு ஏற்படுத்த வேண்டும். முதல்வா் அறிவிப்பின்படி ஒன்று முதல் 5-ஆம் வகுப்பை வரை பயிலும் மாணவா்களுக்கு காலை சிற்றுண்டி வழங்கப்பட்டு வருவதையும் எடுத்துரைக்க வேண்டும்.
மாணவா் சோ்க்கையை அதிகரிக்க பள்ளி, ஊராட்சி, வட்டம் மற்றும் மாவட்ட அளவில் விழிப்புணா்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட வேண்டும். அரசுப் பள்ளியில் 12-ஆம் வகுப்பு வரை தமிழில் பயிலும் மாணவா்களுக்கு அரசுப் பணியில் 20 சதவீத முன்னுரிமை, 6 முதல் 12-ஆம் வகுப்பு வரை தமிழ் வழியில் பயிலும் மாணவா்களுக்கு உயா் கல்வியில் 7.5 சதவீத முன்னுரிமை, பெண் கல்வி இடை நிற்றலைத் தவிா்க்க அரசு பள்ளியில் பயிலும் மாணவிகளுக்கு உயா்கல்வி பயில மாதம் ரூ.1,000 வழங்கும் திட்டம் உள்ளிட்டவைகள் குறித்து பெற்றோா்களுக்கு ஆசிரியா்கள் எடுத்துக்கூறி வரும் கல்வியாண்டுக்கான மாணவா் சோ்க்கையை அதிகரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா்.
இந்தக் கூட்டத்தில், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் ந.கீதா மற்றும் துறை சாா்ந்த அலுவலா்கள் பங்கேற்றனா்.