விபத்துகளை தடுக்க, மக்களிடையே போதிய விழிப்புணர்வு; கலெக்டர் அறிவுறுத்தல்

Tirupur News,Tirupur News Today- திருப்பூர் மாவட்டத்தில், வாகன விபத்துகளை தடுக்க, பொதுமக்களிடையே போதிய விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என, கலெக்டர் கிறிஸ்துராஜ் அறிவுறுத்தினார்.;

Update: 2023-08-31 16:59 GMT

Tirupur News,Tirupur News Today- விபத்தில்லாத மாவட்டமாக, திருப்பூரை உருவாக்க கலெக்டர் தலைமையில் ஆலோசனை (கோப்பு படம்)

Tirupur News,Tirupur News Today- திருப்பூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் சாலை பாதுகாப்பு குறித்து மாதாந்திர ஆய்வு கூட்டம் நடந்தது.

இக்கூட்டத்தில், கலெக்டர் கிறிஸ்துராஜ் கூறியதாவது,

தமிழ்நாடு முதலமைச்சர் சாலை விபத்தில்லா தமிழ்நாட்டை உருவாக்கும் வகையில், பல்வேறு சாலை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு நடவடிக்கைகளை தொடர்ச்சியாக மேற்கொள்ள அறிவுறுத்தியுள்ளார். அந்த வகையில், திருப்பூர் மாவட்டத்தில் சாலைப்பாதுகாப்பு குறித்து மாதாந்திர ஆய்வு கூட்டம் நடத்தப்பட்டு வருகிறது. பொதுமக்களிடையே சாலை விதிகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தி, விபத்துகள் மற்றும் உயிரிழப்புகளை தவிர்க்கும் நோக்கில் மாவட்ட நிர்வாகம் மற்றும் காவல்துறையின் சார்பில் தொடர்ச்சியாக விழிப்புணர்வு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

விபத்துக்கான காரணங்களாக இருச்சக்கர வாகனங்களில் ஓட்டுநர் மற்றும் பின்னால் அமர்ந்து இருப்பவர் இருவரும் தலைகவசம் அணியாதது, குடிபோதையில் வாகனம் ஓட்டுவது, வாகனம் ஓட்டும் போது அலைபேசியை பயன்படுத்துவது, மோட்டார், கார் போன்ற 4 சக்கர வாகனங்களில் சீட்பெல்ட் அணியாதது, சாலை விதிகளை முறையாக கடைப்பிடிக்காதது மற்றும் சாலை ஓரங்களில் உள்ள கடைகளினாலும், வாகனங்களில் நிறுத்தி விற்பனை செய்யும் உணவுப்பொருட்களை வாங்க வரும் நபர்களும் சாலையில் வாகனத்தை நிறுத்துவதாலும் உள்ளிட்டவைகளால் விபத்துகள் ஏற்படுகின்றன. அவற்றை தடுக்க காவல்துறை உரிய நடவடிக்கை எடுத்து வருகிறது.

மேலும் விபத்துகளை தடுக்கும் வகையில் சாலைகளின் முக்கிய இடங்களில் விழிப்புணர்வு விளம்பர பதாகைகள், நெடுஞ்சாலைத்துறையின் சார்பில் வாகன ஓட்டிகள் எளிதில் அறியும் வண்ணம் வைத்திட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

குறிப்பாக சாலை வளைவுகள், சாலை சந்திப்புகள், குறுகிய சாலைகள்,போக்குவரத்து நெரிசல் மிக்க இடங்கள் போன்ற பகுதிகளில் அதிகம் வேகம் காரணமாக விபத்துகள் ஏற்படுகின்றன. மேலும் சாலைகளில் எதிர் திசையில் வாகனத்தை ஓட்டுவதாலும், சாலைகளில் செல்லும் போது உரிய செய்கை இல்லாமல் வாகனத்தை திருப்புவதாலும் சாலை விபத்துகள் ஏற்படுகின்றன. எனவே வட்டார போக்குவரத்து அலுவலர்கள் மற்றும் காவல்துறை அலுவலர்கள் சாலை பாதுகாப்பு குறித்து தொடர் நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும்.

சாலை பாதுகாப்பு மற்றும் சாலை விதிகள் குறித்து அனைத்து வாகன ஓட்டிகளுக்கும் தெரியும் வண்ணம் தொடர் விழிப்புணர்வு நடவடிக்கைகளை அனைத்துத்துறை அலுவலர்களும் ஒருங்கிணைந்து மேற்கொள்ள வேண்டும். சாலைப்பாதுகாப்பு என்பது ஒவ்வொரு தனி மனிதனும் சாலை விதிகளை கடைபிடித்து விபத்தினை தவிர்ப்பதாகும். சாலை விபத்தினால் ஏற்படும் உயிரிழப்புகள், உறுப்பிழப்புகள் மற்றும் கொடுங்காயங்களின் விளைவாக மன அளவிலும், பொருளாதார நிலையிலும் பல குடும்பங்கள் பாதிக்கப்படுகின்றன.

எனவே சாலை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வில் அனைத்து மக்களின் பங்களிப்பும் மிக முக்கியமானதாகும். திருப்பூர் மாவட்டத்தை சாலை விபத்தில்லா மாவட்டமாக மாற்ற வட்டார போக்குவரத்து அலுவலர்கள் மற்றும் காவல்துறை அலுவலர்கள் முனைப்பாக செயல்பட வேண்டும். பொதுமக்களுக்கு போதிய விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.

இவ்வாறு கலெக்டர் கூறினார். 

அதனைத்தொடர்ந்து கலெக்டர் கிறிஸ்துராஜ் தலைமையில் மாதாந்திர சட்டம்,ஒழுங்கு குறித்து ஆய்வுக்கூட்டம் நடந்தது. இக்கூட்டத்தில் மாவட்ட போலீஸ் எஸ்.பி சாமிநாதன்,மாநகராட்சி ஆணையாளர் பவன்குமார் கிரியப்பனவர் ,மாவட்ட வருவாய் அலுவலர் ஜெய்பீம், உதவி கலெக்டர் (பயிற்சி) கிர்திகா விஜயன், துணை காவல் கண்காணிப்பாளர் வனிதா, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குநர் லட்சுமணன், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) விஜயராஜ் மற்றும் வட்டார போக்குவரத்து அலுவலர்கள் உட்பட துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர். 

Tags:    

Similar News