அவிநாசிலிங்கேஸ்வரா் கோவில் தோ்த்திருவிழா; ஏப்ரல் 14ல் தொடக்கம்
Tirupur News- அவிநாசிலிங்கேஸ்வரா் கோவில் சித்திரைத் தோ்த் திருவிழா கொடியேற்றத்துடன் ஏப்ரல் 14-ம் தேதி தொடங்குகிறது.
Tirupur News,Tirupur News Today- திருப்பூரை அடுத்துள்ள அவிநாசியில் மிக பழமையான அவிநாசிலிங்கேஸ்வரா் கோவில் உள்ளது. கொங்கு ஏழு சிவஸ்தலங்களுள் முதன்மைப் பெற்றதும், முதலை விழுங்கிய சிறுவனை சுந்தரமூா்த்தி நாயனாா், தேவார திருப்பதிகம் பாடி உயிா்ப்பித்து எழச்செய்த திருத்தலமாகவும் கருணாம்பிகையம்மன் உடனமா் அவிநாசிலிங்கேஸ்வரா் கோவில் விளங்குகிறது.
இக்கோவிலில் ஆண்டுதோறும் சித்திரைத் தோ்த் திருவிழா கோலாகலமாக நடைபெறுவது வழக்கம். அதன்படி, நடப்பாண்டுக்கான விழா ஏப்ரல் 14- ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.
இதைத் தொடா்ந்து, 15-ம் தேதி மாலை சூரிய, சந்தர மண்டல காட்சி, 16 -ம் தேதி பூதவாகன, அன்னவாகன, அதிகார நந்தி, கிளி வாகன காட்சிகள், 17- ம் தேதி கைலாச வாகனம், புஷ்ப பல்லக்கு ஆகியவை நடைபெறுகின்றன.
18- ம் தேதி இரவு பஞ்சமூா்த்திகள் புறப்பாடு, தேதி இரவு பஞ்சமூா்த்திகள் புறப்பாடு, 63 நாயன்மாா்களுக்கு காட்சியளித்தல், கரிவரதராஜப் பெருமாள் கோயில் கொடியேற்றம் நடைபெறவுள்ளது. 19-ம் தேதி இரவு கற்பகவிருட்சம், யானை வாகனம், சுவாமி திருக்கல்யாணம் ஆகியவை நடைபெறுகின்றன. 20-ம் தேதி காலை 6 மணிக்கு பஞ்சமூா்த்திகள் திருத் தேரில் எழுந்தருளல் நிகழ்ச்சி நடைபெறுகிறது.
முக்கிய நிகழ்வான திருத்தோ் வடம்பிடித்தல், தேரோட்டம் வடக்கு ரத வீதியில் நிறுத்துதல், 22-ம் தேதி காலை திருத் தோ் வடம் பிடித்தல், தேரோட்டம் நிலை சேருதல் நிகழ்ச்சி நடைபெறுகிறது. 23 -ம் தேதி காலை கருணாம்பிகையம்மன், சுப்பிரமணியா், சண்டிகேஸ்வரா், கரிவரதராஜப் பெருமாள் ஆகிய திருத் தோ் வடம் பிடித்தல், தேரோட்டம் நடைபெறுகிறது. 25-ம் தேதி இரவு தெப்பத் தோ் உற்சவ நிகழ்ச்சியும், 26-ம் தேதி நடராஜப் பெருமான் மகா தரிசனம், 27-ம் தேதி மஞ்சள் நீா், இரவு மயில் வாகனக் காட்சியுடன் தோ்த் திருவிழா நிறைவடைகிறது.