விளைச்சல் குறைந்தது: விலை அதிகரித்தது!
நிலக்கடலை விளைச்சல் குறைந்த நிலையில், தேவை அதிகரித்ததால், விலை உயர்ந்து காணப்பட்டது.
திருப்பூர் மாவட்டத்தில், அவினாசி, சேவூர், ஈரோடு மாவட்டத்தில், கோபி, அந்தியூர், நம்பியூர் உள்ளிட்ட பல இடங்களில் நிலக்கடலை சாகுபடியில் விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனர். இவர்கள் அவினாசி, சேவூரில் உள்ள ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில், வாரந்தோறும் நடக்கும் ஏலத்தில், நிலக்கடலை விற்பனை செய்து வருகின்றனர்.
இந்நிலையில், கடந்த, செப்டம்பர் மாதம் துவங்கிய நிலக்கடலை அறுவடை சீசன், தற்போது முடிவுக்கு வந்தது. இருப்பினும், ஒழுங்கு முறை விற்பனை கூடத்தில் நடந்த ஏலத்தில், நிலக்கடலைக்கான தேவை அதிகரித்து காணப்பட்டது. வியாபாரிகள், அதிக விலைக்கு ஏலம் கோரினர்.
கோபி, அந்தியூர் பகுதிகளில் உள்ள விவசாயிகள், நிலக்கடலையை இருப்பு வைத்து, விற்பனைக்கு எடுத்து வந்தனர். இதனால், முதல் தர நிலக்கடலைக்கு, குவிண்டாலுக்கு அதிகபட்சம், 7,000 ரூபாய் வரை விலை கிடைத்ததால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.