தறிக்குழிக்குள் தேங்கிய தண்ணீர்: நெசவாளர்கள் கண்ணீர்
அவினாசி அருகே, நெசவாளர் குடியிருப்புக்குள் நிலத்தடியில் மழைநீர் கசிந்ததால், தறி இயக்குவதில் சிரமம் ஏற்பட்டுள்ளது.
திருப்பூர் மாவட்டம், அவினாசி அருகேயுள்ள தத்தனுார் ஊராட்சிக்கு உட்பட்ட, சாவக்கட்டுப்பாளையத்தில், கைத்தறி நெசவு தொழிலில் பெரும்பாலான குடும்பத்தினர் ஈடுபட்டு வருகின்றனர். நெசவாளர்கள், தங்கள் வீட்டின் தரைப்பகுதியில் இருந்து நிலத்தடியில், மூன்றடி ஆழத்துக்கு குழி தோண்டி, தறியை இயக்குவதற்குரிய பகுதியை குழிக்குள் பொருத்துவர். தரையில் அமர்ந்து, அந்த குழிக்குள் கால்களை செலுத்தி, தறியை இயக்குவர்.
கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது. இதில், 10 வீடுகளில், நிலத்தடியில் தண்ணீர் ஊறியதால், தறிக்குழிக்குள் தண்ணீர் கசிந்தது. இதனால், தறி இயக்குவதில், சிரமம் ஏற்பட்டுள்ளது என, நெசவாளர்கள் கூறினர். கடந்த, 10 ஆண்டுகளுக்கு முன், இதுபோன்று தறிக்குழிக்குள் தண்ணீர் நிரம்பியது. பாதிப்பு குறித்து, வருவாய் துறையினரின் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது. தேவையான ஏற்பாடுகளை செய்வதாக தெரிவித்துள்ளதாக, தத்தனுார் ஊராட்சி மன்ற தலைவர் விஜயகுமார் கூறினார்.