இல்லம் தேடி கல்வி திட்டத்துக்கு தன்னார்வலர்கள் தேவை
அவினாசி ஒன்றிய பகுதியில் இதுவரை, 456 தன்னார்வலர்கள் மட்டுமே பதிவு செய்து, மையங்களை திறந்து, மாலை நேர வகுப்பெடுத்து வருகின்றனர்.
அவிநாசி ஒன்றியத்தில் ஊராட்சி ஒன்றிய துவக்க, நடுநிலை, அரசு மற்றும் உதவி பெறும் பள்ளிகளில் படிக்கும் மாணவ, மாணவியரில், 1,448 பேர், 'இல்லம் தேடி கல்வி' திட்டத்தின் கீழ் பயன்பெற தகுதியுள்ளவர்கள்.
இத்திட்டத்தில், கல்வி போதிக்க, 20 பேருக்கு ஒருவர் வீதம், 724 தன்னார்வலர்கள் தேவை. அவினாசி ஒன்றிய பகுதியில் இதுவரை, 456 தன்னார்வலர்கள் மட்டுமே பதிவு செய்து, மையங்களை திறந்து, மாலை நேர வகுப்பெடுத்து வருகின்றனர். திருமுருகன்பூண்டி நகராட்சியில் அம்மாபாளையம், ராக்கியாபாளையம் பகுதிகள், புதுப்பாளையம் ஊராட்சி வஞ்சிபாளையம், அவிநாசி பேரூராட்சி புனித தோமையார் துவக்கப்பள்ளி, திருவள்ளுவர் துவக்கப்பள்ளி மாணவ, மாணவியருக்கு கல்வி போதிக்க தன்னார்வலர்கள் போதியளவில் இல்லை.
'இத்திட்டத்தில் இணைய விருப்பமுள்ள பிளஸ் 2 மற்றும் இளங்கலை பட்டப்படிப்பு முடித்தவர்கள், அந்தந்த பள்ளி தலைமையாசிரியர்களை அணுகி, தன்னார்வலராக இணையலாம்' என, கல்வி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.