பனிப்பொழிவு எதிரொலி: மிரள வைக்கும் மலை காய்கறி விலையேற்றம்
கடும் பனிப்பொழிவால் மலைக்காய்கறிகளின் விலை ‘கிடுகிடு’ வென உயர்ந்துள்ளது.;
நீலகிரி மாவட்டம் ஊட்டி, கோத்தகிரி உள்ளிட்ட இடங்களில் விளையும், கேரட், பீட்ரூட், பீன்ஸ், முட்டைகோஸ் ஆகியவை, மேட்டுப்பாளையம் மண்டி மூலம் விற்கப்படுகிறது. திருப்பூர் மாவட்டத்தின் பல இடங்களில் உள்ள காய்கறி கடைகளில், அவை விற்கப்படுகின்றன.
நீலகிரி மாவட்டத்தின் சமீபத்தில் பெய்த தொடர் மழையால், விவசாயம் பாதிக்கப்பட்டது. மேலும், தொடர் பனிப்பொழிவால் விளை நிலங்களில் பயிரிடப்பட்டிருந்த பயிர்கள் கருகின. இதனால், மகசூல் வெகுவாக குறைந்தது; இதனால், கடைகளுக்கான வரத்தும் அடியோடு சரிந்தது.
இதனால், ஒரு கிலோ கேரட், 120 ரூபாய், பீட்ரூட், பீன்ஸ் ஆகியவை, 90 ரூபாய், முட்டை கோஸ், 80 ரூபாய் என விற்கப்பட்டது. பிற மாவட்டங்களில் இருந்து வரும் காய்கறிகளை விட, மலை காய்கறிகளின் சுவை அதிகம் என்பதால், அவற்றை விரும்பி வாங்கும் மக்கள் அதிகம். இந்நிலையில் திடீர் விலையேற்றத்தால், பொதுமக்கள் கவலை அடைந்துள்ளனர்.