ரோட்டரி சங்கம் சார்பில் கணியாம்பூண்டியில் தடுப்பூசி முகாம்

வஞ்சிபாளையம் ரோட்டரி சங்கம் சார்பில், கணியாம்பூண்டியில், இலவசமாக 2ம் தவணை கொரோனா தடுப்பூசி முகாம், இன்று நடைபெற்றது.

Update: 2021-06-26 13:45 GMT

அவிநாசி தாலுகா, கணியாம்பூண்டியில் ரோட்டரி சங்கம் சார்பில் இன்று நடைபெற்ற தடுப்பூசி முகாமில், பொதுமக்கள் 2வது டோஸ் இலவசமாக தடுப்பூசி போடப்பட்டது. 

திருப்பூர் மாவட்டத்தில் அதிகளவில் அச்சுறுத்தி வந்த  கொரோனா தொற்று, மாவட்ட நிர்வாகம், சுகாதாரத்துறை, தன்னார்வலர்கள், தொண்டு நிறுவனங்களின் முயற்சியாலும், ஊரடங்கு உத்தரவாலும் படிப்படியாக குறைந்து வருகிறது. ஆரம்பத்தில், கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ள மக்களிடம் ஆர்வம் குறைந்து காணப்பட்டது. ஆனால், பல்வேறு தொண்டு நிறுவனங்கள் விழிப்புணர்வு  ஏற்படுத்தியதாலும், கொரோனா தாக்கத்தாலும், தற்போது தடுப்பூசி போட்டுக்கொள்ள மக்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

இந்த நிலையில், திருப்பூர் மாவட்டம் அவிநாசி தாலுகா, வஞ்சிபாளையம் ரோட்டரி சார்பில், கடந்த மார்ச் மாதத்தில்,  முருகம்பாளையம் மண்டபத்தில், முதல் தவணை கோவீட்சீல்டு தடுப்பூசி முகாம் நடைபெற்றது. அதை தொடர்ந்து, இன்று கணியாம்பூண்டியில் 2 வது டோஸ் கோவிஷீல்டு தடுப்பூசி முகாம் நடைபெற்றது.

ரோட்டரி சங்கம் சார்பில், இலவசமாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்த முகாமில், பொதுமக்கள் சமூக இடைவெளி கடைபிடித்து, முகக்கவசம் அணிந்து, தடுப்பூசி போட்டுக்கொண்டனர். பொதுமக்களுக்கு தேநீர், தண்ணீர் பாட்டில் உள்ளிட்டவை, ரோட்டரி சங்கம் சார்பில் வழங்கப்பட்டது.

Tags:    

Similar News