அவினாசியில் அனுமதியின்றி உண்ணாவிரதம்: விவசாய சங்கத்தினர் கைது
அவினாசி பேருந்து நிலையம் அருகே தடையை மீறி உண்ணாவிரதம் இருந்த விவசாய சங்க பிரதிநிதிகள் கைது செய்யப்பட்டனர்.;
வேளாண் துறையினருக்கு சொந்தமான நிலம், ஆக்கிரமிப்பில் உள்ளதாக கூறி, தடையை மீறி உண்ணாவிரதம் இருந்த, விவசாய சங்க பிரதிநிதிகள் கைது செய்யப்பட்டனர்.
திருப்பூர் மாவட்டம், அவினாசி புதிய பஸ் நிறுத்தம் அருகே, வேளாண்மை துறையினரின் பயன்பாட்டில் இருந்த நிலத்தில், வேளாண்மை விரிவாக்க மைய கட்டடம் கட்ட திட்டமிடப்பட்டது. அந்த இடத்தை தனியார் சிலர் ஆக்கிரமித்துள்ளனர்.
இந்நிலையில் அந்த நிலத்தை மீட்டெடுக்க வேண்டும் எனக்கூறி, வட்டாட்சியர் அலுவலகம் முன், அனுமன் சேனா மாநில செயலாளர் தியாகராஜன், பாரதிய கிசான் சங்க நிர்வாகி வேலுசாமி உள்ளிட்ட சிலர் உண்ணாவிரதம் இருந்தனர்.
அவர்களிடம் காவல்துறை ஆய்வாளர் முரளி, பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது, சட்ட விரோதமாக ஆவணங்களை மாற்றி, தனியாருக்கு சாதகமான நிலைபாட்டை வருவாய்த்துறையினர் எடுத்துள்ளனர். ஆக்கிரமிக்கப்பட்ட இடத்தில் தனியார் மில் உரிமையாளர் கட்டுமானப்பணி செய்து வருகிறார். இதனை தடுத்து நிறுத்த வேண்டும் என தெரிவித்தனர்.
அப்போது காவல் ஆய்வாளர் முரளி, இந்த நில விவகாரம் தொடர்பாக சட்டப்படி அணுகுங்கள் எனக்கூறினார். இதனை ஏற்க மறுத்த விவசாய சங்க பிரதிநிதிகள் உண்ணாவிரதம் இருந்தனர். அவர்களை கைது செய்த போலீசார், திருமண மண்டபத்தில் தங்க வைத்தனர்.