ராஜ்ய புரஸ்கார் விருது: திருப்பூர் மாவட்ட மாணவ, மாணவியருக்கு பயிற்சி
‘ராஜ்ய புரஸ்கார்’ விருது பெற, திருப்பூர் மாவட்ட மாணவ, மாணவியருக்கு பயிற்சி வழங்கப்பட்டது.;
திருப்பூர் கல்வி மாவட்ட சாரண சாரணியர் இயக்கம் சார்பில், அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் படிக்கும் சாரண, சாரணியர்களுக்கு, 'ராஜ்ய புரஸ்கார்' விருது பெறுவதற்கான, முன்தேர்வு பயிற்சி முகாம், திருமுருகன்பூண்டியில் உள்ள ஏவிபி., பள்ளி வளாகத்தில் நடந்தது.
மாவட்ட சாரண, சாரணியர் அமைப்பின் ஒருங்கிணைப்பாளரும், மாவட்ட உதவி ஆணையருமான ராஜாராம் மேற்பார்வையில், துணை செயலாளர் தனசிங் முன்னிலையில், முகாம் நடந்தது. இந்த முகாமில், அவினாசி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி, ஜெய்வாபாய் மாதிரி பெண்கள் மேல்நிலைப்பள்ளி, கே.ஜி.எஸ்., பள்ளி, மைக்ரோ கிட்ஸ் பள்ளி, ஏ.வி.பி., ஆகிய பள்ளிகளில் படிக்கும், 50க்கும் மேற்பட்ட சாரண சாரணியர் கலந்து கொண்டனர்.
இவர்களுக்கு எழுத்து மற்றும் செய்முறை தேர்வுகள் நடத்தப்பட்டன. வனப்பகுதி உள்ளிட்ட ஒதுக்குப்புறமான இடங்களுக்கு செல்லும் போது, கூடாரம் அமைத்து, அதில் தங்குவது குறித்த செயல் விளக்கம் அளிக்கப்பட்டது.