கருவலூர் மாரியம்மன் கோவிலில் வரும் ஏப்ரல் 5ல் தேரோட்டம்
Karuvalur Mariamman Temple- கருவலூரில் உள்ள பிரசித்த பெற்ற மாரியம்மன் கோவிலில், தேரோட்ட விழா வரும் 5ம் தேதி நடைபெறுகிறது.;
Karuvalur Mariamman Temple-அவிநாசியை அடுத்து, கருவலூரில் மாரியம்மன் கோவில் உள்ளது. இங்கு ஆண்டுதோறும் தேர்த்திருவிழா நடைபெறும். அதேபோல் இந்த ஆண்டும் ஏப்ரல் 5-ம் தேதி தேரோட்டம் நடக்கிறது.
இன்று (வெள்ளிக்கிழமை) கிராம சாந்தி நிகழ்ச்சியும், ஏப்ரல் 1-ம் தேதி கொடியேற்ற நிகழ்ச்சியும் நடக்கிறது. 4-ம் தேதி திருக்கல்யாண உற்சவம் நடக்கிறது. 5-ம் தேதி காலை அதிர்வேட்டு முழங்க சுவாமி திருத்தேருக்கு எழுந்தருள்கிறார். இதையடுத்து பக்தர்கள் ரதத்தின் மீது வீற்றிருக்கும் சுவாமியை தரிசனம் செய்கின்றனர். பின்னர் பிற்பகல் தேர் வடம்பிடித்து இழுக்கப்படுகிறது.
தொடர்ந்து 6 மற்றும் 7-ம் தேதி தேர் இழுக்கப்பட்டு நிலை வந்தடைகிறது. 8-ம் தேதி பரிவேட்டை மற்றும் தெப்ப உற்சவம் நடக்கிறது. 9-ம் தேதி மஞ்சள் நீர் விழா நடைபெறுகிறது.
தேர்த் திருவிழாவை முன்னிட்டு விழா குழுவினர் மற்றும் உபயதாரர்கள் மூலம் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்படுவதாக கோவில் பரம்பரை அறங்காவலர் லோகநாதன் தெரிவித்தார். இதனிடையே கோவில் உண்டியல் திறந்து எண்ணப்பட்டத்தில் ரொக்கமாக ரூ.6 லட்சத்து 18 ஆயிரத்து 839- ம், தங்கம் 44 கிராமும், வெள்ளி 202 கிராமும் பக்தர்களால் காணிக்கையாக செலுத்தப்பட்டிருந்ததாக கோவில் நிர்வாகத்தினர் தெரிவித்துள்ளனர்.
கருவலூர் மாரியம்மன் கோவில், திருப்பூர் மாவட்ட அளவில் மிகவும் பிரசித்தி பெற்ற கோவில். சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள ஊர்களில், குழந்தைகளுக்கு அம்மை வார்த்தால், இந்த கோவிலுக்கு வந்து கண்ணடக்கம் வாங்கி வைத்து வழிபட்டு சென்றால், அம்மை வார்த்த குழந்தைகள் உடனடியாக குணமடைவர். அம்மை தாக்கத்தில் இருந்தும், குழந்தைகளுக்கு பாதிப்பு குறையும் என்பது ஐதீகமாக உள்ளது.
எனவே, வாரத்தின் வெள்ளிக்கிழமை மற்றும் முக்கிய விசேஷ நாட்களில் மாரியம்மன் கோவிலில் நடக்கும் சிறப்பு பூஜைகளில், ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சுவாமியை வழிபடுவது குறிப்பிடத்தக்கது.
அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2