திருமுருகன்பூண்டி திருமுருகநாத சுவாமி கோவிலில் 'நிறை மனிதர்கள்' - ஆன்மிக குழு சிறப்பு வழிபாடு
Tirupur News- திருமுருகன்பூண்டி, திருமுருகநாத சுவாமி கோவிலில் 'நிறை மனிதர்கள்' ஆன்மிக குழு சிறப்பு வழிபாடு நடந்தது.
Tirupur News,Tirupur News Today- 'நிறை மனிதர்கள்' ஆன்மிக குழுவினர், தமிழகத்தில் உள்ள 48 முருகன் கோவில்களுக்கு சென்று, தியானம், யோகா மற்றும் 48 நாட்களுக்கு அதிகாலையில் கந்த சஷ்டி கவச பாராயணம் செய்து வருகின்றனர்.
நிறைவு நாளில், முருகன் கோவிலில் செவ்வாய் ஹோரையில் சிறப்பு வழிபாடு நடத்தி வருகின்றனர். முதன்முதலில் சென்னிமலையிலும், இரண்டாவதாக பழமுதிர்ச்சோலையிலும், மூன்றாவதாக திருப்பரங்குன்றத்திலும் நிகழ்ச்சி நடந்தது.
நான்காவதாக, திருப்பூர் மாவட்டம், அவிநாசி அருகிலுள்ள திருமுருகன்பூண்டி, திருமுருகநாத சுவாமி கோவிலில் நேற்று சிறப்பு நிகழ்ச்சிகள் நடந்தது.
திருமுருகன்பூண்டி கோவில் பாடல் பெற்ற தலங்களில் கொங்கு நாட்டுத் தலங்களில் ஒன்றாகும். சுந்தரர் பாடல் பெற்ற இத்தலம் திருப்பூர் மாவட்டம், திருமுருகன்பூண்டியில் அமைந்துள்ளது. இத்தலத்திற்கு துர்வாசர் கற்பகவுலகிலிருந்து மாதவி மரத்தைக் கொண்டுவந்தார் என்பது தொன்நம்பிக்கை. இறைவன் தன் பூத கணங்களை ஏவிச் சுந்தரரின் செல்வங்களைப் பறித்த தலமென்ற நம்பிக்கையும் உள்ளது.
முருகநாதசுவாமி சுயம்பு மூர்த்தியாக உள்ளார். நுழைவு வாசலில் பதினாறுகால் மண்டபம் உள்ளது. சுவாமி, அம்மன் சன்னிதிகள் மேற்கு நோக்கி அமைந்துள்ளன. கோயிலின் நடுவில் சண்முகதீர்த்தம்; இடப்புறத்தில் ஞானதீர்த்தம்; வலப்புறத்தில் பிரம்ம தீர்த்தம் என மூன்று தீர்த்தங்கள் உள்ளன.
முருகன் வழிபட்டதற்கு அடையாளமாக முருகன் சன்னிதியின் கருவறையில் மேற்கு நோக்கியவாறு லிங்கம் உள்ளது. இங்குள்ள முருகனிடம் வேலும் மயிலும் இல்லை. அவற்றைக் கோயிலுக்கு வெளியே விட்டுவிட்டு வந்து சிவனை முருகன் வழிபட்டதாகத் தொன்நம்பிக்கை உள்ளது. சுந்தரர் பொருட்களைப் பறிகொடுத்த இடமான கூப்பிடு விநாயகர் கோவில் அவிநாசிக்கு அருகில் அமைந்துள்ளது.
'நிறை மனிதர்கள்' ஆன்மிக குழுவினர் சார்பில், இக்கோவில் உள்ள முருகப்பெருமானின் மயில் வாகனத்திற்கும், வேலிற்கும் வழிபாடு செய்து விழா துவங்கியது. பின்னர் கந்த சஷ்டி கவச பாராயணம் செய்யப்பட்டது. திருமுருகநாத சுவாமிக்கு சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டது. தொடர்ந்து பிரகார வழிபாடும், பெரியசாமி சித்தர் ஜீவ சமாதி வழிபாடும் நடந்தது.
பிற்பகலில் வள்ளிக்கும்மி நிகழ்ச்சியும், பாராட்டும், மகிழ்வான குடும்பத்திற்கு விருதும் வழங்கப்பட்டன. தலைமை ஒருங்கிணைப்பாளர் யாதுமானவன் வழிகாட்டுதலில் குடும்ப ஒற்றுமைக்கான சிறப்பு சொற்பொழிவும் நடந்தது. ஐநுாறுக்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் குழந்தைகளுடன் கலந்துகொண்டனர். அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை இணை ஒருங்கிணைப்பாளர் ஹரி மற்றும் உறுப்பினர்கள் செய்திருந்தனர்.
திருமுறை முற்றோதல்
திருமுருகன்பூண்டி கோவில் வளாகத்தில் நேற்று, திருப்பூர் சைவ சித்தாந்த சபை சார்பில், பன்னிரு திருமுறை தொடர் முற்றோதல் நிகழ்ச்சி நடந்தது. மாலை,5:00 மணிக்கு துவங்கி, 7:00 மணி வரை,முற்றோதல் நடந்தது. ஏராளமான சிவனடியார்கள் பங்கேற்றனர்.