சாவி எடுக்காமல் நிறுத்தப்பட்ட ஸ்கூட்டர்: 1.80 லட்சம் ரூபாயை திருடிய இளைஞர்
சாவியை எடுக்காமல் நிறுத்தப்பட்ட பனியன் நிறுவன உரிமையாளரின் ஸ்கூட்டரில் இருந்து, 1.80 லட்சம் ரூபாயை இளைஞர் திருடிச்சென்றார்.
திருப்பூர் மாவட்டம், 15 வேலாம்பாளையம், காவிலிபாளையம் பகுதியைச் சேர்ந்தவர் வசந்தகுமார். இவர் அவினாசி, வஞ்சிப்பாளையத்தில் பனியன் கம்பெனி வைத்துள்ளார். நேற்று, தொழிலாளர்களுக்கு சம்பளம் தருவதற்காக, தனது ஸ்கூட்டியில், அவினாசி புதிய பஸ் ஸ்டாண்டு பகுதியில் உள்ள இரண்டு வங்கிக் கிளைகளின் ஏ.டி.எம்., மையங்களில், இருந்து, 1.81 லட்சம் ரூபாய் பணத்தை எடுத்துள்ளார்.
தன்னிடம் இருந்த, 20 ஆயிரம் ரூபாயையும் சேர்த்து, ஒரு லெதர் பையில் வைத்து, ஸ்கூட்டியில் வைத்துக் கொண்டு, அங்கிருந்த 'டூவீலர் வர்க்ஷாப்' சென்றுள்ளார். டூவீலரில் இருந்து சாவியை எடுக்காமலேயே, வண்டியை நிறுத்தி விட்டு, வர்க்ஷாப்புக்குள் சென்று, தனது டூவீலரை சர்வீஸ் செய்வது தொடர்பாக விசாரித்து விட்டு வருவதற்குள், தனது டூவீலரில் இருந்த சாவியை எடுத்து, பணத்தை யாரோ திருடிச் சென்றது தெரிய வந்தது. அதிர்ச்சியடைந்த அவர், அவினாசி போலீசில் புகார் செய்தார்.
வசந்தகுமாரை நோட்டம் விட்டு, பின்தொடர்ந்து வந்த ஒரு இளைஞர் தான், நிறுத்தப்பட்டிருந்த ஸ்கூட்டரில் இருந்து சாவியை எடுத்து, பணத்தை எடுத்துச் சென்றது, அங்குள்ள ஒரு கடையில் இருந்த சி.சி.டி.வி., கேமராவில் தெரிந்தது. அந்த இளைஞரை போலீசார் தேடி வருகின்றனர்.