போலீசார் அழைத்துச் சென்ற இளைஞர் மாயம் : அன்னுாரில் சாலை மறியல்
போலீசார் அழைத்துச் சென்ற இளைஞர் காணவில்லை என்று கூறி அன்னூரில் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
அவினாசி சட்டசபை தொகுதிக்கு உட்பட்ட அன்னுார் அருகே லக்கேபாளையத்தை சேர்ந்தவர் ஓதிசாமி, 37; கம்ப்யூட்டர் இன்ஜினியராக பணிபுரிகிறார். கொங்கு இளைஞர் பேரவையில் நிர்வாகியாக உள்ளார்.
நேற்று முன்தினம் மதியம் 3:00 மணிக்கு சாதாரண உடையில் காரில் வந்த மூன்று பேர், ஓதிசாமியை காரில் ஏற்றி அழைத்துச் சென்றனர். அவர் எங்கு அழைத்துச் செல்லப்பட்டார் என தெரியாததால் பதட்டமடைந்த கொங்கு இளைஞர் பேரவை அமைப்பினரும், கிராம மக்களும், இரவு அன்னுார் போலீஸ் ஸ்டேஷன் முன் திரண்டனர்.
'பெருந்துறையில் ஓதிசாமி மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. விசாரணைக்காக, அங்கு அழைத்து செல்லப்பட்டுள்ளார்' என, அன்னுார் போலீசார் தெரிவித்தனர். ஆனால், பெருந்துறை போலீஸ் ஸ்டேஷனில் அவர் இல்லை என்பது தெரிய வர, 100க்கும் மேற்பட்டோர், கோவை -– சத்தி தேசிய நெடுஞ்சாலையில், கைகாட்டியில் மறியலில் ஈடுபட்டனர். இதையடுத்து, 100 பேர் கைது செய்யப்பட்டனர். அரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.