அவிநாசி அருகே ‘டாஸ்மாக்’ பாரை முற்றுகையிட்ட பொதுமக்களால் பரபரப்பு
Tirupur News- சேவூர் பந்தம்பாளையத்தில் ‘டாஸ்மாக்’ பார் திறக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து, பொதுமக்கள் முற்றுகையிட்டனர்.
Tirupur News,Tirupur News Today- திருப்பூர் மாவட்டம், அவிநாசியை அடுத்துள்ள சேவூர், பந்தம்பாளையத்தில் ‘டாஸ்மாக்’ பார் திறக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து, அந்த பாரை பொதுமக்கள் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சேவூர் பந்தம்பாளையத்தில் தனியாருக்கு சொந்தமான இடத்தில் ‘டாஸ்மாக்’ பார் அமைப்பதற்கான நடவடிக்கை, கடந்த 6 மாதங்களுக்கு முன் மேற்கொள்ளப்பட்டது. இதற்கு அந்த பகுதி பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும் முதலமைச்சரின் தனிப்பிரிவு, மாவட்ட கலெக்டர், தாசில்தார் உள்ளிட்டோருக்கு மனு கொடுத்தனர். மேலும் வேட்டுவபாளையம், சேவூர், முறியாண்டம்பாளையம் ஆகிய ஊராட்சிகளில் நடந்த கிராம சபை கூட்டத்திலும் ‘டாஸ்மாக்’ பாருக்கு எதிர்ப்பு தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இந்நிலையில், ‘டாஸ்மாக்’ பார் கடந்த 17-ம் தேதி திறக்கப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அந்த பகுதியை சேர்ந்த ஏராளமான பொதுமக்கள், ‘டாஸ்மாக்’ பாரை நேற்று முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதுபற்றி தகவல் அறிந்து வந்த அவிநாசி தாசில்தார் மோகனன் மற்றும் போலீசார் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். அப்போது ஒரு வார காலத்திற்குள் உரிய நடவடிக்கை எடுப்பதாக அதிகாரிகள் கூறியதை அடுத்து பொதுமக்கள் கலைந்து சென்றனர். பொதுமக்கள் நடத்திய முற்றுகை போராட்டத்தால், அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
பெண் மயக்கம்
இதற்கிடையில் முற்றுகை போராட்டத்தின் போது கடுமையான வெயில் காரணமாக ஒரு பெண் மயக்கம் அடைந்தார். அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. அவரை மற்ற பெண்கள் பாதுகாப்பாக அங்கிருந்து அழைத்து சென்றனர். போராட்டத்தின் போது ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.