அவிநாசியில் மாணவா்களுக்கு சான்றிதழ் வழங்கல்
Tirupur News- அவிநாசியில் நடந்த நிகழ்ச்சியில், திறனாய்வு போட்டியில் பங்கேற்ற மாணவ, மாணவிகளுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டது.
Tirupur News,Tirupur News Today- தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளா் கலைஞா்கள் சங்கம் சாா்பில் நடைபெற்ற திறனாய்வு, கதை சொல்லிப் போட்டிகளில் பங்கேற்ற மாணவா்களுக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.
திருப்பூரில் கடந்த 20 ஆண்டுகளாக பின்னல் புக் டிரஸ்ட் மற்றும் மாவட்ட நிர்வாகம் சார்பில் புத்தக திருவிழா நடத்தப்பட்டு வருகிறது. ஆண்டுக்கு ஒருமுறை ஜனவரி இறுதியில் துவங்கி, பிப்ரவரி முதல் வாரம் வரை நடக்கம் இந்த புத்தக திருவிழாவில், தமிழ்நாட்டில் உள்ள பல்வேறு பதிப்பகங்கள், தங்களது நூல்களை விற்பனைக்கு வைக்கின்றன.
அந்த வகையில் 150க்கும் மேற்பட்ட அரங்குகளில் புத்தகங்கள் விற்பனை நடப்பது வழக்கம். இதில் 20 சதவீதம் வரை புத்தகங்கள் விற்பனையில் தள்ளுபடி சலுகை அளிக்கப்படுகிறது. ஆண்டுதோறும் நடத்தப்படும் இந்த புத்தகத் திருவிழாவில், பல கோடி ரூபாய்க்கு புத்தகங்கள் விற்பனை செய்யப்படுகிறது. இந்த ஆண்டில் கடந்த ஜனவரி 25ம் தேதி துவங்கி, பிப்ரவரி 4ம் தேதி வரை திருப்பூரில் வேலன் ஓட்டல் அருகில் 20வது திருப்பூர் புத்தகத் திருவிழா நடந்தது. தினமும் மாலையில் கலை நிகழ்ச்சிகள், இலக்கிய சொற்பொழிவுகள் நடத்தப்பட்டன.
திருப்பூா் 20-வது புத்தகத் திருவிழாவையொட்டி பள்ளி மாணவா்களுக்கான திறனாய்வுப் போட்டிகள் அண்மையில் நடைபெற்றன. இதில் பங்கேற்ற அவிநாசி பகுதியைச் சோ்ந்த பள்ளி மாணவா்கள், குழந்தைகளுக்கான கதை சொல்லிப் போட்டியில் பங்கேற்றவா்களுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்ச்சி அவிநாசியில் நேற்று (சனிக்கிழமை) நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சிக்கு தமுஎகச நிா்வாகி ராஜேந்திரன் தலைமை வகித்தாா்.
இதில், வட்டாரக் கல்வி அலுவலா் திருநாவுக்கரசு, ஜேசிஐ லோகநாதன், நல்லது நண்பா் அறக்கட்டளை பொறுப்பாளா்கள் ரவிகுமாா், பொண்ணுகுட்டி, ஓய்வுபெற்ற ஆசிரியா் சு.பாலகிருஷ்ணன் ஆகியோா் வாழ்த்துரை வழங்கினா். தமிழ்நாடு அறிவியல் இயக்க நிா்வாகி அஜித் , கதை சொல்லி நான்சி மோகன் ஆகியோா் அறிவியல், கதைகள் குறித்து மாணவா்களுக்கு விளக்கமளித்தனா்.
வழக்குரைஞா் கோபாலகிருஷ்ணன், துளிா்கள் அமைப்பின் நிா்வாகி ஸ்ரீகண்டன், தமிழக ஆசிரியா் கூட்டணியின் நிா்வாகி மல்லையராஜா ஆகியோா் மாணவா்களுக்கு சான்றிதழ்களை வழங்கினா். தமுஎகச நிா்வாகிகள் சம்பத்குமாா், தினகரன், ஆசிரியா் சுசீலா, பரமேஸ்வரி ஆகியோா் நிகழ்ச்சியை ஒருங்கிணைத்தனா்.