சேறு கலந்த நீரை பருகுவதா? நுகர்வோர் அமைப்பு புகார்
சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வினியோகம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என, நுகர்வோர் அமைப்பினர் வலியுறுத்தியுள்ளனர்.;
திருப்பூர் மாவட்ட ஆட்சியர் வினீத் தலைமையில், நுகர்வோர் காலாண்டு கூட்டம் நடத்தப்பட்டது. இதில், திருமுருகன்பூண்டியில் செயல்படும், 'தி கன்ஸ்யூமர் கேர் அசோசியேஷன்' சார்பில், அதன் தலைவர் காதர்பாஷா மற்றும் நிர்வாகிகள் வழங்கிய மனுவில் கூறியுள்ளதாவது:
வீடுகளில் பயன்படுத்தப்படும் ஆர்.ஓ., குடிநீர், உடல் நலனுக்கு கேடு விளைவிக்கும் என, மருத்துவர்கள் எச்சரிக்கை விடுக்கின்றனர். எனவே, பொதுவினியோக முறையில், சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வினியோகம் செய்ய வேண்டும். மழைக்காலங்களில், உள்ளாட்சி நிர்வாகங்கள் சார்பில் வினியோகிக்கப்படும் தண்ணீர், சேறு கலந்து வினியோகிக்கப்படுகிறது. இந்த தண்ணீரை பருகுவதால், பல்வேறு உடல் உபாதை ஏற்படும் வாய்ப்புள்ளதால், மக்கள் தொகைக்கேற்ப தேவையான அளவு சுத்திகரிப்பு நிலையங்கள் அமைத்து, சுத்திரிக்கப்பட்ட குடிநீரை மக்களுக்கு வழங்க வேண்டும். இவ்வாறு, அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.