பட்டா இடத்திற்கே மீண்டும் பட்டா: பயனாளிகள் குழப்பம்
அவினாசி அருகே, பட்டா வழங்கிய இடத்திற்கு மீண்டும் பட்டா வழங்கப்பட்ட விவகாரம், சர்ச்சையை கிளப்பியுள்ளது.
திருப்பூர் மாவட்டம், அவினாசி தாலுகாவுக்கு உட்பட்ட பகுதிகளில் வசிக்கும், 40 பயனாளிகளுக்கு, கடந்த, ஜூலை மாதம், அரசின் இலவச வீட்டுமனைப்பட்டா வழங்கப்பட்டது.
பட்டா பெற்றவர்களுக்கு, தெக்கலுார் ஊராட்சிக்குட்பட்ட ஏரிபாளையம் பகுதியில் இடம் ஒதுக்கப்பட்டது. பட்டா பெற்றவர்கள் அந்த இடத்துக்கு சென்று குடிசை அமைக்க முற்பட்ட போது, 'அப்பகுதியில் வசிக்கும் சிலர், இந்த இடத்தில் ஏற்கனவே தங்களுக்கு பட்டா வழங்கப்பட்டுள்ளது' எனக்கூறியதால், சர்ச்சை எழுந்தது.
இதுகுறித்து அதிகாரிகள் கூறியதாவது: ஏரிபாளையம் பகுதியில், பட்டா பெற்றவர்கள் அங்கு குடிசை அமைக்க செல்லும் போது தான், அந்த இடத்தில், ஏற்கனவே சிலர் பட்டா பெற்றுள்ள விவரம் தெரிய வந்துள்ளது. கடந்த, 2004ல், அந்த இடத்தில் சிலருக்கு பட்டா வழங்கப்பட்டுள்ளது. அரசின் இலவச வீட்டுமனைப்பட்டா பெற்ற இடத்தில், பட்டா பெற்று, 6 மாதங்களுக்குள் வீடு கட்டிக்கொள்ள வேண்டும்; அல்லது குடிசை அமைத்து, பயன்பாட்டுக்கு கொண்டு வந்துவிட வேண்டும். தவறும்பட்சத்தில், அந்த பட்டா செல்லாததாக மாறிவிடும்.
கடந்த, 2004ம் ஆண்டு, பட்டா பெற்றவர்கள் அங்கு வீடு கட்டவில்லை; அந்த இடத்தை பயன்படுத்திக் கொள்ளவும் இல்லை. அந்த இடம் புதர் மண்டி, வெறுமனே இருந்தது. புதிய பயனாளிகளுக்கு அந்த இடத்தை வழங்க நில அளவை பணி செய்த போதோ, அதிகாரிகள் கள ஆய்வுக்கு செல்லும் போது கூட யாரும் ஆட்சேபம் தெரிவிக்கவில்லை. மாறாக, வேறு நபர்களுக்கு பட்டா வழங்கப்பட்ட பின், ஆட்சேபனை தெரிவிக்கின்றனர். இந்த குழப்பம் குறித்து, உயரதிகாரிகளின் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டு, அவர்களது ஆலோசனைப்படி நடவடிக்கை எடுக்கப்படும். என்று கூறினார்.