கருவலுார் மாரியம்மன் கோவில் தேரோட்ட விழா கோலாகலம்
அவினாசி அருகே கருவலுார் மாரியம்மன் கோவில் தேரோட்டம், விமரிசையாக நடந்தது.;
திருப்பூர் மாவட்டம், அவினாசி அருகே கருவலுாரிலுள்ள பிரசித்தி பெற்ற மாரியம்மன் கோவில் தேர் திருவிழா, கடந்த, 8ம் தேதி பூச்சாட்டு விழாவுடன் துவங்கியது. 19ல் கொடியேற்றம் நடத்தப்பட்டது. முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம், நேற்று துவங்கியது.
காலை, 6:00 மணிக்கு தங்க காப்பு அலங்காரத்தில் அம்பாள் திருத்தேருக்கு எழுந்தருளினார். மாலை, 4:30 மணிக்கு பக்தர்கள், தேர் வடம் பிடித்து இழுத்தனர். நுாற்றுக்கணக்கான மத்தியில், திருத்தேர் அசைந்தாடி வந்தது. தேர், முதல் நிலையை அடைந்ததும், பக்தர்கள் கைத்தட்டி ஆரவாரம் செய்தனர்.
இன்றும் தேரோட்டம் நடக்கிறது. தேர்த்திருவிழாவை முன்னிட்டு, ஏராளமான கடைகள் அமைக்கப்பட்டிருந்தன. சிறுவர், சிறுமியர் விளையாட, விளையாட்டு உபகரணங்கள் என, கருவலுார் பகுதி விழாக்கோலம் பூண்டிடிருந்தது. உள்ளூர் மட்டுமின்றி கோவை, திருப்பூர் உள்ளிட்ட பிற இடங்களில் இருந்தும் பக்தர்கள் வந்தனர்.
இன்று மாலை, திருத்தேர், நிலை வந்து சேரும். நாளை, இரவு, 10:00 மணிக்கு தெப்ப உற்சவமும், காமதேனு வாகனத்தில் எழுந்தருள் நிகழ்வும், தொடர்ந்து, குதிரை வாகனத்தில் எழுந்தருளி, பரிவேட்டை நடக்கிறது. 27ம் தேதி, மகா தரிசனம், மஞ்சள் நீராடல், கொடி இறக்கம் ஆகியவை நடக்கிறது. வரும், 30ம் தேதி, மறுபூஜை, பாலாபிேஷகத்துடன் விழா நிறைவு பெறுகிறது. இதற்கான ஏற்பாடுகளை, கோவில் செயல் அலுவலர், பரம்பரை அறங்காவலர்கள், அறங்காவலர் குழு தலைவர் மற்றும் உறுப்பினர்கள், ஊர் பொதுமக்கள் செய்து வருகின்றனர்.