அவிநாசியில் பஸ்களை முறையாக இயக்க வலியுறுத்தல்; கையொப்ப இயக்கம் நடத்திய மா. கம்யூ.,
Tirupur News-அவிநாசியில் பஸ்களை முறையாக இயக்க வலியுறுத்தி கையொப்ப இயக்கம் நடத்தப்பட்டது.
Tirupur News,Tirupur News Today- அவிநாசியில் பஸ்களை முறையாக இயக்க வலியுறுத்தி மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினா் கையொப்ப இயக்கத்தில் நேற்று (வியாழக்கிழமை) ஈடுபட்டனா்.
அவிநாசி வட்டாரத்துக்கு உட்பட்ட வடுகபாளையம், நடுவச்சேரி பகுதியில் 15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனா். இப்பகுதிக்கு வழித்தட எண் 36, 36ஏ ஆகிய பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இப்பகுதிகளுக்கு கூடுதல் பஸ்களை இயக்க வேண்டும் என, மக்கள் நீண்டகாலமாக கோரிக்கை விடுத்து வரும் நிலையில், இதுவரை அந்த கோரிக்கை நிறைவேற்றப்படவில்லை.
இந்த பஸ்கள் குறித்த நேரத்திற்கு இயங்குவதில்லை என்று கூறப்படுகிறது. இதனால், பள்ளி, கல்லூரி செல்லும் மாணவா்கள், வேலைக்கு செல்பவா்கள் பாதிக்கப்பட்டுள்ளனா். மேலும், காலை 10.30 முதல் பிற்பகல் 3.30 மணி வரை பஸ்கள் இயக்கப்படாததால் அவசரத் தேவைகளுக்குக் கூட செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
இப்பகுதிகளில் இருந்து அவிநாசி, திருப்பூர் உள்ளிட்ட பகுதிகளுக்கு தினமும் நூற்றுக்கணக்கான மக்கள் சென்றுவரும் நிலையில் குறிப்பிட்ட நேரத்தில் பஸ்கள் போக்குவரத்து இல்லாததால் மக்கள் கடுமையாக பாதிக்கப்படுகின்றனர். குறிப்பாக காலை, மாலை, இரவு நேரங்களில் மணிக்கணக்கில் பஸ்கள் இல்லாத நிலையே நீடிப்பதாக அப்பகுதி மக்கள் புகார் கூறி வருகின்றனர்.
இந்நிலையில் வடுகபாளையம், நடுவச்சேரி பகுதிகளுக்கு முறையாக பஸ்களை இயக்க வலியுறுத்தி மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினா் கையொப்ப இயக்கத்தில் நேற்று (வியாழக்கிழமை) ஈடுபட்டனா்.
இதில், மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டக் குழு உறுப்பினா் பழனிசாமி, ஊராட்சி மன்ற உறுப்பினா் ராமசாமி, முன்னாள் கிளைச் செயலாளா் சுப்பிரமணியம் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.