திருப்பூர் மாவட்டத்தில் ரம்ஜான் பண்டிகை வீடுகளிலேயே சிறப்பு தொழுகை
திருப்பூர் மாவட்டத்தில் கொரோனா முடக்கம் காரணத்தால், ரம்ஜான் பண்டிகையை வீட்டிலேயே தொழுகை நடத்தி கொண்டாடினர்.;
கொரோனா காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளதால், வழிபாட்டுதலங்களில் மக்கள் கூட கூடாது என அரசு தெரிவித்து உள்ளது. திருப்பூர் மாவட்டத்தில் கொரோனா தொற்று பரவல் கட்டுப்பாடுகள் காரணமாக பள்ளிவாசல்கள், பொது திடல்களில் சிறப்பு தொழுகை நடத்தப்படவில்லை. அவரவர் வீடுகளிலேயே முஸ்லிம்கள் ரம்ஜான் தொழுகை நடத்தினார்கள்.
பள்ளிவாசல்களில் அந்தந்த மதத்தலைவர் மட்டும் தொழுகை நடத்தினர். ரம்ஜான் தொழுகை குறித்து பள்ளிவாசல்களில் ஒலிபெருக்கியில் அறிவிப்பு செய்யப்பட்டதும் வீட்டில் உள்ள ஆண்களில் பெரியவர்கள் தொழுகை நடத்தினார்கள். பெண்கள், குழந்தைகள் தொழுகையில் கலந்து கொண்டனர்.
உறவினர்கள், நண்பர்களை ஆரத்தழுவி ரம்ஜான் வாழ்த்து கூறுவது வழக்கம். பெரும்பாலானவர்கள் விலகி இருந்தே வாழ்த்துகளை பரிமாறிக்கொண்டனர். சிலர் தங்கள் வீட்டில் இருந்தபடி உறவினர்களுக்கு வீடியோ கால் மூலம் ரம்ஜான் வாழ்த்துகளை பரிமாறிக்கொண்டனர்.