பயிர்களை அழிக்கும் மான் -மயில்களால் விவசாயிகள் வேதனை

அவிநாசியில், காட்டுப்பகுதிகளில் சுற்றித் திரியும் மான்கள் மற்றும் மயில்கள் பயிர்களை அழித்து நாசம் செய்துவிடுவதாக விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.

Update: 2022-11-24 15:49 GMT

மான்- மயில்களால் பாதிக்கப்படும் விவசாயிகள் வேதனை (கோப்பு படம்)

திருப்பூர் மாவட்டம் அவிநாசி ஒன்றியத்தில் உள்ள 31 ஊராட்சிகளில் ஆயிரக்கணக்கான குக்கிராமங்கள் உள்ளன. கடந்த 40, 50 ஆண்டுகளுக்கு முன் தென்னை, வாழை, மஞ்சள், நெல், கரும்பு உள்ளிட்ட விவசாயம் செழித்து வளர்ந்து எங்கு பார்த்தாலும் பச்சை கம்பளம் விரித்தாற்போல் லேசான காற்றுக்கு பயிர்கள் அசைவது ரம்மியமாக காட்சியளிக்கும். காலப்போக்கில் பருவமழை சரிவர பெய்யாமல் விவசாயம் நலிவடைந்த நிலையில் பலர் திருப்பூர் போன்ற நகரங்களில் வெவ்வேறு தொழில்களை நாடிச்சென்றனர். இருப்பினும் பழமையை மறவாமல் விவசாயம்தான் நாட்டின் பொருளாதார வளர்ச்சியின் முக்கிய அங்கம் என்ற நோக்கில் பல இன்னல்களுக்கிடையே சில விவசாயிகள் மனம் தளராமல் விவசாயம் செய்து வருகின்றனர்.

இந்நிலையில் பயிர்களை நல்லமுறையில் பாதுகாத்து இரவு விடியவிடிய கண்விழித்து தண்ணீர் பாய்ச்சி, உரம் வைத்து நல்லமுறையில் பயிர்களை பாதுகாத்து வளர்த்து வருகின்றனர். ஆனால் தோட்டம் ,காட்டுப்பகுதிகளில் சுற்றித் திரியும் மான்கள் மற்றும் மயில்கள் பயிர்களை அழித்து நாசம் செய்துவிடுவதாக விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.

இது குறித்து அவர்கள் கூறுகையில், முன்பெல்லாம் தோட்டம், காடுகளில் விவசாயதொழிலுடன் ஆடு,மாடு, கோழிவளர்ப்பில் ஈடுபடுவார்கள். நாகரீக உலகத்தில் தற்போது நாட்டுக்கோழி, ஆடுகள் வளர்ப்பது மறைந்துவருகிறது. அதேசமயம் மான், மயில்கள் தோட்டத்திற்குள் புகுந்து விவசாயபயிர்களை நாசம் செய்துவிடுகிறது. அரும்பாடுபட்டு வளர்த்த பயிர்கள் நாசமாவதுடன் எங்கள் பாடு வீணாகி பெருத்த நஷ்டம் ஏற்படுகிறது.

புதுப்பாளையம் ஆகிய பகுதிகளில் மட்டுமே மான்கள் இருந்த நிலையில் இப்போது அவிநாசி ஒன்றியத்தில் 40 கி.மீ சுற்றளவிற்கு தோட்டம் ,காடுகளில் மான்கள், மயில்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்த மான்கள் இருப்பதை 50 கி. மீ., தொலைவில் இருக்கும் சிறுத்தைகள் மோப்ப சக்தியால் கண்டுகொள்கிறது. எனவேதான் சிறுத்தை நடமாட்டம் தொடங்கிவிட்டது. வாழ்நாள் முழுவதும் மான், மயில்களுடன் போராடுவது போதாதென்று தற்போது எந்த நேரத்தில் தோட்டப்பகுதிக்குள் சிறுத்தை வருமோ என்ற அச்சத்தில் உள்ளோம் மான், மயில்களின்தொந்தரவை கட்டுப்படுத்த அரசு,விவசாயத்துறை, தோட்டக்கலை துறையினரிடம் கோரிக்கை வைத்தும் அவர்கள் அதற்குஎந்த முயற்சியும் எடுப்பதில்லை. அரசும் கண்டுகொள்வதில்லை. இவர்கள் இதற்கு தீர்வுகாண அவிநாசி ஒன்றியத்தில் உள்ள அனைத்து விவசாயிகளும் ஒன்றுதிரண்டு சாகும்வரை உண்ணாவிரதம் மேற்கொள்வது ஒன்றுதான் வழி, என்றனர்.

மான்களும், மயில்களும் காட்சிக்கு அழகானவையாக இருந்தாலும், விவசாயிகளை பொருத்தவரை பயிர் விளைச்சலை அழித்து நாசம் செய்வது, விவசாயிகளுக்கு கடுமையான பாதிப்பை ஏற்படுத்துகிறது. பல மாதங்களாக உழைத்து பயிர் செய்த விளைச்சலை அழிப்பதால், பொருளாதார ரீதியாக பலத்த நஷ்டமும் விவசாயிகளுக்கு ஏற்படுகிறது. இப்பிரச்னைகளுக்கு உடனடி தீர்வு காணும் வகையில், மாவட்ட நிர்வாகமும், வனத்துறை மற்றும் வேளாண் துறை அதிகாரிகளும் ஒருங்கிணைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே, விவசாயிகளின் கோரிக்கையாக உள்ளது,

Similar News