அவிநாசிலிங்கேஸ்வரர் கோவிலில் 48 நாட்களுக்கு அன்னதானம்
Tirupur News- பிரசித்தி பெற்ற அவிநாசிலிங்கேஸ்வரர் கோவிலில், மண்டல பூஜை நடைபெற்று வருவதால், 48 நாட்களுக்கு தினமும் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
Tirupur News,Tirupur News Today- அவிநாசியில் உள்ள அவிநாசிலிங்கேஸ்வரர் கோவிலில் மண்டல பூஜைகள் கோலாகலமாக நடைபெற்று வருகின்றன. அவிநாசியப்பர் பக்தர்கள் குழு சார்பில் அன்னதானம் வழங்கப்படுகிறது.
அவிநாசிலிங்கேஸ்வரர் கோவில் கும்பாபிேஷகம் கடந்த 2ம் தேதி கோலாகலமாக நடந்தது. நேற்று முன்தினம் முதல் மண்டல பூஜைகள் நடைபெற துவங்கியது. நாள்தோறும் அபிஷேகம், அலங்கார தீபாராதனைகளும் நடக்கின்றன.
தொடர்ந்து 48 நாட்கள் மண்டல பூஜை தினம்தோறும் காலை 10:00 மணி முதல் மதியம் 12.00 மணி வரை நடைபெறுகிறது. ஒரு கட்டளைதாரர் 20000 ரூபாய், ஹிந்து சமய அறநிலைத்துறை அலுவலகத்தில் செலுத்தி, இதில் கலந்து கொள்ளலாம் என கோவில் நிர்வாகத்தினர் தெரிவித்தனர்.
மண்டல பூஜைகள் முறைகள் குறித்து சிவாச்சாரியார் சிவக்குமார் குருக்கள் கூறியதாவது: கோவிலில் 3ம் தேதி முதல் 12 நாட்களுக்கு அதிகாலை 5:00 முதல் இரவு 8:30 மணி வரை கோவில் நடை திறந்திருக்கும்.
தற்போது, பக்தர்கள் கூட்டம் காரணமாக அர்ச்சனைகள் எதுவும் செய்யாமல் தீபாராதனைகள் மட்டும் நடைபெறுகிறது.
கும்பாபிஷேக பணிகளில் தொடர்ந்து சிவாச்சாரியார்கள் ஈடுபட்டு வந்தனர். அவர்களது நலனை கருத்தில் கொண்டு கோவில் நடை திறக்கப்படும் கால நேரம் மற்றும் பூஜைகள் முடிவு செய்யப்படும். இவ்வாறு, சிவக்குமார் குருக்கள் கூறினார்.
இனி வரும் மண்டல பூஜை நாட்களில், தொடர்ந்து பக்தர்களுக்கு அவிநாசியப்பர் பக்தர்கள் குழு சார்பில் அன்னதானம் வழங்கப்பட உள்ளது.