திருமுருகன்பூண்டி திமுகவை திரிசங்கு நிலைக்கு தள்ளிய கட்சித்தலைமை
திருமுருகன்பூண்டி நகராட்சி தலைவர் பதவியை, கட்சித்தலைமையின் உத்தரவின்படி ராஜினாமா செய்ய முடியாமல் திமுகவினர் திணறி வருகின்றனர்.
திருப்பூர் மாவட்டம், திருமுருகன்பூண்டி நகராட்சி தலைவர் பதவியை, தி.மு.க., கைப்பற்றிய நிலையில், கட்சித்தலைமையின் உத்தரவை பின்பற்றி, ராஜினாமா செய்ய முடியாத நிலையில், கட்சியினர் திணறி வருகின்றனர்.
திருப்பூர் மாவட்டம், திருமுருகன்பூண்டி நகராட்சி, துவக்கம் முதலே, அ.தி.மு.க.,வின் செல்வாக்கு பெற்ற பகுதியாக இருந்து வருகிறது. இம்முறை நகராட்சி என்ற அந்தஸ்துடன் முதல் தேர்தலை சந்தித்தது. மொத்தமுள்ள, 27 வார்டில், தி.மு.க.9, இ.கம்யூ. 5, மா.கம்யூ. 3 இடங்களில் வெற்றி பெற்று, 17 இடங்களுடன் பெரும்பான்மை பலம் பெற்றது.
அ.தி.மு.க., பொருத்தவரை, 24 வார்டுகளில் போட்டியிட்டு, 10 வார்டுகளில் வெற்ற பெற்றது; மூன்று வார்டுகளில் வேட்பாளர்களை நிறுத்தாமல், அங்கு பா.ஜ., வேட்பாளர்களுக்கு ஆதரவளித்தது.
பேராவலில் கட்சியினர்
பூண்டி அரசியல் வரலாற்றில், முதன்முறையாக தலைவர் பதவியை அலங்கரிக்கும் பேராவலில், திமுகவினர் இருந்தனர். தி.மு.க., கூட்டணியை பொருத்தவை, அ.தி.மு.க.,வை வீழ்த்த வேண்டும்; தலைவர், துணைத் தலைவர் நாற்காலியை பிடிக்க வேண்டும் என்பது மட்டும் தான் அவர்களது நோக்கமாக இருந்து வந்தது. இதனால், தி.மு.க., மற்றும் கூட்டணி கட்சியினர் கடுமையாக தேர்தல் பணியாற்றினர்; பணத்தை வாரி இறைத்தனர். கூட்டணி கட்சியினர் போட்டியிடும் வார்டுகளுக்கும் கூட, பணத்தை செலவழித்தனர்.
தி.மு.க.வின் தலைவர் வேட்பாளராக, அக்கட்சியின் நகர செயலாளர் பாரதி, முன்னாள் நகர செயலாளர் குமார் ஆகியோர் முன்னிறுத்தப்பட்டனர். இதில், நகர செயலாளர் பாரதி, முன்னாள் நகர செயலாளர் குமார், ஆகியோர் வெற்றி பெற்றனர். தங்களுக்குள் பதவி மோதல் இருக்க கூடாது என்ற நோக்கத்தில், தலைவர் பதவிக்கான போட்டியில் இருந்து நகர செயலாளர் பாரதி விலக, குமார், தலைவர் வேட்பாளராக முன்னிறுத்தப்பட்டார். இ.கம்யூ.,மற்றும் மா.கம்யூ., கட்சியினரும் இதை ஏற்றுக் கொண்டனர்.
இந்த சூழ்நிலையில் யாரும் எதிர்பாராத வகையில், தலைவர் பதவியை மா.கம்யூ., கட்சிக்கு ஒதுக்கி, தி.மு.க., கட்சித்தலைமை உத்தரவிட்டது. 'மா.கம்யூ., கட்சியினரோ, நாங்கள் தலைவர் பதவியை கேட்கவே இல்லை; எப்படி ஒதுக்கினார்கள்' என, தெரியவில்லை என்றனர். இருப்பினும், 'கட்சித்தலைமை உத்தரவிட்டதால், தலைவர் பதவிக்கு போட்டியிடுகிறோம்' எனக் கூறி, தங்கள் கட்சி சார்பில் கவுன்சிலர் சுப்ரமணியத்தை, தலைவர் வேட்பாளராக அறிவித்தனர்.
இதனால், தி.மு.க.,வினரும், இ.கம்யூ. கட்சியினரும் பேரதிர்ச்சியடைந்தனர். வெறும் மூன்று வார்டுகளில் வெற்றி பெற்று, தலைவர் பதவிக்கு ஆசைபடுகிறார்களே என்ற ஆதங்கத்தை காட்டிலும், துவக்கம் முதல் தி.மு.க. தான், தலைவர் நாற்காலியை குறி வைத்து, களமாடி வருகிறது என்பதை மறந்து போய்விட்டார்களே என்ற ஆதங்கம் தான், அவர்களுக்கு அதிகமாக இருந்தது.
இந்நிலையில் தலைவர் பதவிக்கான தேர்தலில், மா.கம்யூ., வேட்பாளர் சுப்ரமணியம் நிறுத்தப்பட, தி.மு.க., சார்பில் குமார் போட்டியிட்டு, வெற்றியும் பெற்றார். இதில், சுப்ரமணியம், 12 கவுன்சிலர்கள், குமார், 15 வார்டுகளும் பெற்றனர். துணைத்தலைவர் பதவி இ.கம்யூ., கட்சிக்கு வழங்கப்பட்டது.
அதிமுக.,வின் காய் நகர்த்தல்
இந்த சந்தர்ப்பத்தில், அ.தி.மு.க.,வினரின் அரசியல் நாடகம் அரங்கேறியது. தி.மு.க.,வினரும், இ.கம்யூ., கட்சியினரும், இணைந்து தலைவர், துணைத் தலைவர் பதவியை தக்க வைக்க உள்ளனர் என்பதை அறிந்த அ.தி.மு.க., 10 உறுப்பினர்களின் பலம் இருந்தும், தங்கள் கட்சி சார்பில் தலைவர் பதவிக்கு வேட்பாளரை களமிறக்காமல், தேர்தல் களத்தில் தங்களை பரம எதிரியான மா.கம்யூ., கட்சிக்கு ஆதரவளித்தது.
மா.கம்யூ., வேட்பாளர் வெற்றி பெறும் பட்சத்தில், அவர்களது ஆதரவுடன், துணைத்தலைவர் பதவியை கைப்பற்ற, அ.தி.மு.க., திட்டம் போட்டிருந்தது. ஆனால், தி.மு.க., வேட்பாளர் வெற்றி பெற்றதால், அ.தி.மு.க.,வின் திட்டம் தகர்ந்தது.
இந்நிலையில், தோழை கட்சி வேட்பாளருக்கு எதிராக போட்டியிட்டு வெற்றி பெற்றவர்கள், தங்கள் பதவியை ராஜினமா செய்ய வேண்டும் என்ற கட்சித்தலைமையின் அறிவிப்பால், பூண்டி தி.மு.க.வினர் குழப்பத்தின் உச்சத்தில் உள்ளனர்.
கட்சி தொண்டர்கள் சிலர் கூறியதாவது;
கடுமையான களப்பணியாற்றி இருக்கிறோம். பெரும் தொகை செலவழித்திருக்கிறோம். படாது பாடுபட்டு, அ.தி.மு.க.,வின் கோட்டையை கைப்பற்றியுள்ளோம். பதவி கைநழுவி போகிறதே என்ற ஆதங்கம் ஒருபுறம் இருந்தாலும், பதவியை ராஜினாமா செய்தால், ஏதாவது ஒரு வகையில் 'அரசியல்' செய்து, அ.தி.மு.க.,வினர் மன்றத்தை கைப்பற்றி விடுவர் என்பதே நிதர்சனம். பதவிக்காக எவ்வளவு பணம் செலவழிக்கவும் அவர்கள் தயாராக உள்ளனர்.
தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட குமார், ஏற்கனவே, பூண்டி பேரூராட்சியாக இருந்த போது, இரண்டு முறை உறுப்பினர் பதவிக்கு போட்டியிட்டு தோற்றவர். 16 ஆண்டு கால கடுமையான போராட்டத்துக்கு பின், வெற்றி பெற்று, தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். அவரது மனநிலையையும் கட்சித்தலைமை சிந்திக்க வேண்டும். ராஜினாமா செய்யாவிட்டால், கட்சித்தலைமையின் நடவடிக்கைக்கு ஆளாக நேரிடுமே என்ற அச்சமும் கட்சி நிர்வாகிகள் மத்தியில் உள்ளது.
சுருக்கமாக சொல்லப்போனால், தலைவர் பதவியை கேட்காத மா.கம்யூ., கட்சிக்கு எந்த அடிப்படையில், கட்சித்தலைமை தலைவர் பதவிக்கான சீட் ஒதுக்கியது; இடையில் நடந்த அரசியல் என்ன என்பதையெல்லாம் கட்சித்தலைமை தீர விசாரிக்க வேண்டும். 'திரிசங்கு' நிலைக்கு கட்சித்தலைமை எங்களை தள்ளிவிட்டது.
இவ்வாறு, கட்சி தொண்டர்கள் சிலர் கூறினர்.
அதே நேரம், இ.கம்யூ., கட்சியினர், தி.மு.க.,வுக்கு ஆதரவாக இருந்ததால் மா.கம்யூ., கட்சியினர் அவர்கள் மீது கடும் கோபத்தில் உள்ளனர். இதுவரை, திருமுருகன்பூண்டி நகராட்சி தலைவர் குமார், தனது தலைவர் பதவியை ராஜினாமா செய்யாத நிலையில், கட்சித்தலைமை என்ன செய்யப்போகிறது என்பதே, கட்சியினரின் எதிர்பார்ப்பு மட்டுமல்ல; நகராட்சி மக்களின் எதிர்பார்ப்பும் கூட.