மங்கலம் அருகே தரைப்பாலம் அமைப்பதில் தகராறு; ஊராட்சித் தலைவர் மீது பொதுமக்கள் புகார்
Tirupur News- திருப்பூர் மாவட்டம் வேட்டுவபாளையம் அருகே தரைப்பாலம் அமைப்பதில் தகராறு ஏற்பட்டது. இதில் வடமாநிலத் தொழிலாளர்களை வைத்து பொதுமக்களை தாக்கியதாக, ஊராட்சித் தலைவர் மீது புகார் எழுந்துள்ளது.
Tirupur News,Tirupur News Today- திருப்பூர் மாவட்டம் மங்கலம் அருகே வேட்டுவபாளையம் ஊராட்சிக்கு உட்பட்ட சுடுகாட்டின் அருகே, கழிவு நீர் தேங்கி நிற்பதாலும், அங்கு ஊற்று நீர் சுரப்பதாலும் சடலங்களை அடக்கம் செய்ய தோண்டும் குழியில் தண்ணீர் ஊற்று உருவாகும் சூழல் இருந்து வந்தது. சுடுகாட்டுக்குள் சேரும் கழிவு நீர், ஊற்று நீரை வெளியேற்ற தரைப்பாலம் அமைக்க வேண்டுமென ஊராட்சி நிர்வாகத்துக்கு அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர். இதற்காக வடிகால் ஏற்படுத்த சுடுகாடு பகுதியில் தரைப்பாலம் அமைக்கும் பணி நடந்து வருகிறது.
இந்நிலையில், அங்கு தரைப்பாலம் அமைத்தால், சுடுகாடு அருகே உள்ள பரமசிவம் என்பவருக்குச் சொந்தமான நூற்பாலைக்குச் செல்லும் வழித்தடம் பாதிக்கும் என்பதால், ஊராட்சித் தலைவர் மூர்த்தி பாலத்தை மாற்றி அமைப்பதற்கான நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதனால், கழிவு நீர் வெளியேறாமல் மீண்டும் சுடுகாட்டில் தண்ணீர் தேங்கும் என்பதால் ஏற்கெனவே திட்டமிட்ட பகுதியில் தரைப்பாலம் அமைக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்தனர்.
இதுதொடர்பாக வேட்டுவபாளையம் ஊராட்சித் தலைவர் மூர்த்திக்கும் அப்பகுதி மக்களுக்கும் இடையே கடந்த வெள்ளிக்கிழமை பேச்சுவார்த்தை நடைபெற்றுள்ளது. அப்போது, இருதரப்பினருக்கும் இடையே கைகலப்பு ஏற்பட்டுள்ளது. அப்போது, ஊராட்சி மன்றத் தலைவர் மூர்த்தியுடன் வந்த வடமாநிலத் தொழிலாளர்கள் அப்பகுதி மக்களைத் தாக்கியுள்ளனர். பதிலுக்கு மக்கள் தாக்கியதில் சிலருக்கு காயம் ஏற்பட்டதுடன், வடமாநிலத் தொழிலாளர்கள் அங்கிருந்து தப்பினர்.
பேச்சுவார்த்தைக்கு சென்ற மக்கள் மீது வடமாநிலத் தொழிலாளர்களைக் கொண்டு தாக்கிய ஊராட்சி மன்றத் தலைவர் மூர்த்தியை கைது செய்யக் கோரி, மங்கலம் சாலையில் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதைத் தொடர்ந்து சம்பவ இடத்துக்குச் சென்ற மங்கலம் போலீஸார் இந்த விவகாரம் தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்ததை தொடர்ந்து பொதுமக்கள் சாலை மறியலைக் கைவிட்டனர்.
இதுகுறித்து சாலை மறியலில் ஈடுபட்ட மக்கள் கூறுகையில், "சுடுகாட்டில் சேரும் கழிவுநீர் மற்றும் ஊற்று நீரை வெளியேற்ற தரைப்பாலம் அமைக்க திட்டமிடப்பட்ட இடத்தை விட்டுவிட்டு தனியார் நூற்பாலைக்கு ஏதுவாக தரைப்பாலம் அமைக்க ஊராட்சிமன்றத் தலைவர் மூர்த்தி திட்டமிட்டார். இதுதொடர்பாக எங்களை பேச்சுவார்த்தைக்கு அழைத்து, அங்கு அவரது அடியாட்களான வடமாநிலத் தொழிலாளர்களை வைத்து எங்களைத் தாக்கினார். திமுக-வைச் சேர்ந்தவர் என்பதால் அவர் மீது நடவடிக்கை எடுக்க காவல் துறையும் தயங்குகிறது. எந்த பாரபட்சமுமின்றி ஊராட்சித் தலைவர் மற்றும் வடமாநிலத் தொழிலாளர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்றனர்.
இதுகுறித்து ஊராட்சித் தலைவர் மூர்த்தி கூறுகையில், "சுடுகாட்டுக்குள் நீர் தேங்குவதைத் தடுக்கும் வகையில் தரைப்பாலம் அமைக்க 8 அடிக்கு குழி எடுத்து பணிகள் நடைபெற்று வந்தது. கழிவுநீர் உள்ளே செல்வதை தடுக்க சுடுகாடு முழுவதும் சுற்றுச்சுவர் அமைக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
மக்களுக்கு இடைஞ்சல் இல்லாமல் தரைப்பாலம் அமைக்க வேண்டுமென்பதே என் நோக்கம். ஆனால், நான் சார்ந்த தி.மு.க. மற்றும் இந்து முன்னணி அமைப்பைச் சேர்ந்த சிலர் தொடர்ந்து தரைப்பாலம் அமைப்பதற்கு பிரச்னை செய்து வந்தனர். அவர்களுடன் பேச்சுவார்த்தைக்கு அவர்கள் சார்பில் 4 பேரை வரச் சொல்லி இருந்தேன். ஆனால், 25-க்கும் மேற்பட்டவர்கள் அங்கு வந்திருந்தனர். பேச்சுவார்த்தை நடைபெற்றுக் கொண்டிருந்தபோதே அவர்களில் சிலர் என்னுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதுடன், தாக்கத் தொடங்கினர்.
பேச்சுவார்த்தைக்காக இருக்கைகள் போடவும், தேநீர் வாங்கித் தரவும் என்னுடைய தொழிற்சாலையில் வேலைபார்க்கும் வடமாநிலத் தொழிலாளர்களை அழைத்துச் சென்றிருந்தேன். நான் தாக்கப்படுவதை பார்த்த வடமாநிலத் தொழிலாளர்கள் என்னை பாதுகாக்க அவர்களைத் தாக்கினர். பின்னர், இருதரப்பையும் சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தேன். யாரைத் தாக்குவதற்கும் வடமாநிலத் தொழிலாளர்களை நான் அழைத்துச் செல்லவில்லை. வேண்டுமென்றே அரசியல் காழ்ப்புணர்ச்சியில் பொய்யான குற்றச்சாட்டை என் மீது சுமத்துகின்றனர்" என்றார்.