வீடுகள் ஒதுக்கீடு செய்ய வலியுறுத்தி கட்டுமான தொழிலாளர்கள் மாநாடு

கட்டுமான தொழிலாளர்களுக்கு, நகர்ப்புற வாழ்வாதார மேம்பாட்டு வாரியத்தின் சார்பில், வீடுகள் ஒதுக்கீடு தர வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.;

Update: 2021-11-30 09:15 GMT

அவினாசி ஒன்றிய சிஐடியு கட்டுமான தொழிலாளர்கள் மாநாடு கொடியேற்றப்பட்டது.

திருப்பூர் மாவட்டம், அவினாசியில், சி.ஐ.டி.யு., கட்டட கட்டுமான தொழிலாளர் சங்கத்தின், அவிநாசி ஒன்றிய மாநாடு நடந்தது. ஒன்றிய தலைவர் ராஜன், அமைப்பின் கொடியேற்றி தலைமை வகித்து துவக்கி வைத்தார். சி.ஐ.டி.யு., அமைப்பின் மாவட்ட குழு உறுப்பினர் பழனிசாமி, கட்டட கட்டுமான தொழிலாளர் சங்கத்தின் மாவட்ட செயலாளர் ரமேஷ் ஆகியோர் பேசினர்.

சிறப்பு அழைப்பாளராக, கட்டட கட்டுமான தொழிலாளர் சங்கத்தின் மாநில பொதுசெயலாளர் குமார் பங்கேற்றார். கூட்டத்தில், நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:

கட்டுமானப் பொருட்களின் விலை உயர்வை கட்டுப்படுத்த வேண்டும். கட்டுமான தொழிலாளர்களின் ஓய்வூதியத்தை, உயர்த்த வேண்டும். தொழிலாளர்களுக்கு, பணி செய்யும் இடத்தில் விபத்து ஏற்பட்டால், அதற்கான மருத்துவ செலவை நலவாரியம் மூலம் வழங்க வேண்டும். இயற்கை மரணத்திற்கு வழங்கும், 20 ஆயிரம் ரூபாயை, ஒரு லட்சம் ரூபாயாக உயர்த்த வேண்டும்.

தொழிலாளர்களின் குழந்தைகளுக்கான கல்வி உதவி தொகையை உயர்த்தி வழங்க வேண்டும். கட்டுமான தொழிலாளிகளுக்கு, குடிசை மாற்று வாரியம் மூலம் வீடுகள் ஒதுக்க வேண்டும் என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

பின், புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர். ஒன்றிய தலைவராக ராஜன், செயலாளராக கனகராஜ், பொருளாளராக செந்தில்குமார், துணை தலைவர்களாக வேலுசாமி, பொன்னுசாமி, துணை செயலாளர்களாக குப்புசாமி, ராஜன் உட்பட, 16 பேர் ஒன்றிய குழுவுக்கு தேர்வு செய்யப்பட்டனர்.

Tags:    

Similar News