விசைத்தறி இயக்கியதில் கருத்து மோதல்: உரிமையாளர்கள் முற்றுகை
விசைத்தறி இயக்கியதில் ஏற்பட்ட கருத்து மோதல் காரணமாக, காவல் நிலையத்தை விசைத்தறி உரிமையாளர்கள் முற்றுகையிட்டனர்.
கூலி ஒப்பந்தத்தை நிறைவேற்ற வலியுறுத்தி, திருப்பூர், கோவை மாவட்ட விசைத்தறி உரிமையாளர்கள் கடந்த, 9ம் தேதி முதல் காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வருகின்றனர். திருப்பூர் மாவட்டம், அவினாசி வட்டம், உப்பிலிபாளையம் பகுதியில் ஜெயபிரகாஷ் என்பவர் சொந்த ரகம் வைத்து, விசைத்தறி இயக்கி வருகிறார். அவர், ஸ்டிரைக்கிற்கு ஆதரவு தராமல் விசைத்தறி இயக்கி வந்துள்ளார்.
அப்பகுதியில் உள்ள விசைத்தறி உரிமையாளர்கள் சங்கத்தைச் சேர்ந்தவர்கள், ஜெயபிரகாஷ் தறி குடோனுக்கு சென்று, ஸ்டிரைக்கிற்கு ஆதரவு கொடுத்து, விசைத்தறி இயக்குவதை நிறுத்த வேண்டும் என கேட்டுள்ளனர். இதை ஜெயபிரகாஷ், ஏற்க மறுத்துள்ளார். இதில் இரு தரப்பினருக்கும் இடையே ஏற்பட்ட விவாதத்தை, வீடியோவாக பதிவு செய்த சிலர் முகநுால் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் பரவ விட்டனர்.
'இந்த வீடியோவால், தான் மன உளைச்சலுக்கு ஏற்பட்டுள்ளது. வீடியோவை பரவ விட்ட விசைத்தறி உரிமையாளர்கள் சங்கத்தினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என, ஜெயபிரகாஷ், அவினாசி காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். இந்த தகவல் அறிந்து, அவினாசி பகுதி முழுக்க உள்ள விசைத்தறி உரிமையாளர்களில், 300க்கும் மேற்பட்டோர் காவல் நிலையம் முன் குவிந்தனர்.
இரு தரப்பினரிடமும், காவல் ஆய்வாளர் கீதா, பேச்சு வார்த்தை நடத்தினார். ஜெயபிரகாஷ், வழக்கம் போல் விசைத்தறியை இயக்குவேன் என்றார். அவர் சார்ந்த வீடியோ, சமூக வலைதளங்களில் இருந்து நீக்கிவிடுமாறு, ஆய்வாளர் கூறினார். இதையடுத்து, விசைத்தறி உரிமையாளர்கள் கலைந்து சென்றனர்.