சுங்க கட்டணம் வசூலிக்கும் பணி அவினாசி பேரூராட்சி நிர்வாகமே ஏற்றது
அவினாசி பேரூராட்சிக்குட்பட்ட பஸ் ஸ்டாண்ட் சுங்க கட்டண வசூல், டூவீலர் ஸ்டாண்ட் ஆகியவற்றை ஏலம் எடுக்க யாரும் முன்வராததால், பேரூராட்சி நிர்வாகமே ஏற்று நடத்துகிறது.;
அவினாசி பேரூராட்சிக்கு உட்பட்ட புதிய பஸ் ஸ்டாண்டுக்குள் வந்து செல்லும் அரசு பஸ்களுக்கு, சுங்க கட்டணம் வசூலிப்பது, புதிய பஸ் ஸ்டாண்டில் உள்ள டூவீலர் ஸ்டாண்டில் நிறுத்தப்படும் சைக்கிள், டுவீலர்களுக்கு கட்டணம் வசூலிப்பது ஆகியவை பேரூராட்சி சார்பில் தனியாருக்கு, குத்தகைக்கு விடப்படுகிறது. குத்தகை காலம், கடந்த, 31ம் தேதியுடன் முடிவுற்ற நிலையில், குத்தகை இனங்களுக்கு, இரு முறை ஏலம் விட்டும், யாரும் ஏலம் எடுக்க முன்வரவில்லை.
இரு குத்தகை இனங்களுக்கும், குத்தகை தொகையாக, 14 லட்சம் ரூபாய் வரை நிர்ணயிக்கப்பட்ட நிலையில், தொகை அதிகம் என்ற காரணத்தை முன்வைத்து யாரும் ஏலம் எடுக்க முன்வரவில்லை எனக் கூறப்படுகிறது. அதே போன்று, வார சந்தையையும் யாரும் ஏலம் எடுக்க யாரும் முன்வரவில்லை. எனவே, பேரூராட்சி நிர்வாகமே, குத்தகை இனங்களில் சுங்க கட்டணம் வசூலிக்கும் பணியை ஏற்றது.