நிற்காமல் சென்ற பஸ்கள் சிறைபிடிப்பு: தெக்கலுாரில் பரபரப்பு
அவினாசி தெக்கலுாரில் நிற்காமல் சென்ற அரசு, தனியார் பஸ்களை, கல்லுாரி மாணவர்கள் மற்றும் மக்கள் சிறை பிடித்தனர்.
திருப்பூர் மாவட்டம், அவினாசி அருகேயுள்ள தெக்கலுாரில், 7,000க்கும் மேற்பட்டோர் வசிக்கின்றனர். தெக்கலுார் பகுதியை சேர்ந்த கல்லுாரி மாணவர்கள், நேற்று முன்தினம் மாலை, கோவையில் இருந்து தெக்கலுார் செல்வதற்காக தனியார் பஸ்சில் ஏறினர்.'பஸ், தெக்கலுார் பஸ் நிறுத்தத்தில் நிற்காது, பைபாஸ் வழியாக தான் செல்லும்' என கண்டக்டர் கூறியுள்ளார். அதே போன்று, மாணவர்கள் சிலர் திருப்பூர் நோக்கி வந்த அரசு பஸ்சில் ஏறியுள்ளனர். 'அரசு பஸ் கண்டக்டரும், புறவழிசாலை வழியாகத்தான் பஸ் செல்லும்' என கூறியுள்ளார்.
பஸ்சில் பயணித்த மாணவர்கள், இத்தகவலை பெற்றோர், பொதுமக்களிடம் மொபைல் போன் மூலம் தெரியப்படுத்தியுள்ளனர். பெற்றோரும், ஊர் மக்களும் கோவையில் இருந்து தெக்கலுார் புறவழிச்சாலை வழியாக வந்த அரசு மற்றும் தனியார் பஸ்களை சிறைப்பிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். அவ்வழியாக வந்த தனியார், அரசு பஸ்கள் என ஏழுக்கும் மேற்பட்ட பஸ்களை சிறைப்பிடித்தனர்.
தகவலறிந்து அங்கு வந்த அவிநாசி காவல் துறையினர் பேச்சு வார்த்தைகளில் ஈடுபட்டு, தெக்கலுார் வழியாகத்தான் பஸ்களை இயக்க வேண்டும் என பஸ் ஓட்டுநர், நடத்துநர்களுக்கு எச்சரிக்கை விடுத்தனர். பிறகு மக்கள் பஸ்களை விடுவித்தனர். இதனால், அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.