வீசியெறிப்படும் பொருட்களில் வியக்க வைக்கும் வடிவம்
அவினாசி அரசு கலை கல்லுாரியில், பி.காம்., பிரிவு மாணவ, மாணவியர், தங்களின் கற்பனை திறனை, கலை வடிவில் வெளிப்படுத்தினர்.;
அவினாசி அரசு கலை அறிவியல் கல்லுாரி பி.காம்., மாணவ, மாணவியர் சார்பில், வீணாகும் பொருட்களை வைத்து, கலை பொருட்களை செய்து காட்சிப்படுத்தினர். பிளாஸ்டிக் பாட்டில், சணல், கயிறு, அட்டை, வளையல், நுால் உள்ளிட்ட பல்வேறு பொருட்களை வைத்து, கலை நயமிக்க பொருட்களை தயாரித்தனர்.
கண்காட்சியை, கல்லுாரி முதல்வர் நளதம், துவக்கி வைத்து பேசினார். இக்கண்காட்சியை ஒருங்கிணைத்த கல்லுாரியின், பி.காம்., துறை தலைவர் செல்வதரங்கிணி கூறுகையில்,''தற்போதைய போட்டி நிறைந்த வர்த்தக உலகில், புதுமையான, ஈர்க்கும் வடிவமைப்பு கொண்ட பொருட்களை நுகர்வோர் அதிகம் விரும்புகின்றனர். மாணவ, மாணவியர் தங்களின் கற்பனை திறமையை பயன்படுத்தி, புதுமையான சிந்தனை மூலம் செயல்படுவது அவசியம். வீணாகும் பொருட்களை கலைநயமுள்ளதாக மாற்றும் முயற்சியின் மூலம், புதுமையான சிந்தனையை மாணவ, மாணவியர் பெறுவர்,'' என்றார். இந்த கண்காட்சியை கல்லுாரியில் படிக்கும் அனைத்து மாணவ, மாணவியரும் பார்வையிட்டு, பாராட்டினர்.