சசிகலாவை வரவேற்க அ.தி.மு.க கொடி: எதிர்ப்பு கிளம்பியதால் அகற்றம்
அவினாசியில், சசிகலாவை வரவேற்க அ.தி.மு.க கொடி கட்டப்பட்டிருந்த நிலையில், அ.தி.மு.க.,வினர் எதிர்ப்பால் அகற்றப்பட்டது.
ஆன்மிக சுற்றுப்பயணம் மேற்கொண்ட, மறைந்த முன்னாள் முதல்வர் மறைந்த ஜெயலலிதாவின் தோழி சசிகலா, நேற்று முன்தினம் இரவு, திருப்பூர் மாவட்டம், அவினாசியில் உள்ள பிரசித்த பெற்ற, அவிநாசிலிங்கேஸ்வரர் கோவிலுக்கு வந்தார்.
அவிநாசி செங்காடுதிடல் பகுதியில் வரவேற்பு வழங்க ஏற்பாடு செய்திருந்தனர். அவரை வரவேற்று அவிநாசி, சேவூர் உள்ளிட்ட இடங்களில், பிளக்ஸ் பேனர் மற்றும் அ.தி.மு.க கொடி தாங்கிய கம்பங்களை கட்டியிருந்தனர். 'சசிகலாவை கட்சியில் இருந்து நீக்கியது செல்லும்' என, ஐகோர்ட் உத்தரவிட்டுள்ள நிலையில், 'அ.தி.முக கொடி கட்ட அனுமதிக்க கூடாது; அவற்றை அகற்ற வேண்டும்' என, அ.தி.மு.க நிர்வாகிகள், அவிநாசி போலீஸ் ஸ்டேஷனில் புகார் கொடுத்தனர். இதையடுத்து, சசிகலா ஆதரவாளர்கள், ரோட்டோரம் முழுக்க கட்டியிருந்த, அ.தி.மு.க. கொடி கம்பத்தை அகற்றினர்.