அவிநாசி அருகே 270 ஆண்டுகள் பழமை வாய்ந்த கல்வெட்டு கண்டெடுப்பு
திருப்பூர் மாவட்டம் அவிநாசி அருகே, 270 ஆண்டுகள் பழமை வாய்ந்த கல்வெட்டு கண்டெடுக்கப்பட்டு உள்ளது.;
பண்டைய மன்னர்களின் ஆணைகள், அவர்கள் செய்த பணிகள் மற்றும் வீரர்கள், பிரபுக்களின் முக்கிய நிகழ்வுகள் நீண்ட காலம் அழியாதிருக்க வேண்டும் என்ரு கருதி, பண்டைய மன்னர்கள், கல்வெட்டுகளில் செதுத்தி வைத்தனர். பொதுமக்கள் காணும் வகையில் கல்வெட்டு இருக்க வேண்டும் என்பதற்காக, கோயில்கள், குகைகள், பொது மண்டபங்கள், வெற்றித் தூண்கள், நடுகற்கள் எனப்படும் இறந்தோர் நினைவுக் கற்கள் என்பவற்றில் கல்வெட்டுக்களைக் காணலாம்.
திருப்பூர் மாவட்டத்தில் அவ்வப்போது பழமையா கல்வெட்டுகள், நடுகற்கள் கண்டெடுக்கப்பட்டு வருகிறது. அவ்வகையில் தற்போது அவிநாசி தாலுகா, சேயூர் அருகே ஆதரம்பாளையத்தில், 270 ஆண்டுகள் பழமையான கல்வெட்டுடன் கூடிய கல்தொட்டி கண்டெடுக்கப்பட்டுள்ளது.
கோவில் முன் இருந்த கல்தொட்டியை, வரலாற்று ஆய்வாளர்கள் முடியரசு, சிவகுமார், பிரவீன் குமார் ஆகியோர் கொண்ட குழுவினர் கண்டறிந்தனர். கல்தொட்டியில் சகாப்தம் 4,852 என எழுதப்பட்டுள்ளது. ஆகையால், இந்த கல்வெட்டு கி.பி.1751ம் ஆண்டை குறிக்கும் என வரலாற்று ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
கல்வெட்டில், கல்தொட்டி அமைக்கப்பட்ட ஆண்டு, அமைத்தவர்களின் பெயர்கள் குறிப்பிடப்பட்டுள்ளதாகவும், இதை முழுமையாக ஆராய்ந்தால், மேலும் பல அரிய தகவல்கள் கிடைக்கக்கூடும் என்று, வரலாற்று ஆய்வாளர்கள் தெரிவித்தனர்.