அரசியல் நோக்கத்துக்காக நிறுத்தி வைக்கப்பட்ட அத்திக்கடவு- அவிநாசி திட்டம்; மத்திய இணை அமைச்சா் எல்.முருகன் திமுக மீது குற்றச்சாட்டு
Tirupur News- அரசியல் நோக்கத்துக்காக நிறுத்திவைக்கப்பட்டுள்ள அத்திக்கடவு- அவிநாசி திட்டத்தை மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் என, மத்திய இணை அமைச்சா் எல்.முருகன் அவிநாசியில் தெரிவித்தாா்.;
Tirupur News,Tirupur News Today- அரசியல் நோக்கத்துக்காக நிறுத்திவைக்கப்பட்டுள்ள அத்திக்கடவு- அவிநாசி திட்டத்தை மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் என மத்திய இணை அமைச்சா் எல்.முருகன் தெரிவித்தாா்.
திருமுருகன்பூண்டியில் பாஜக நகர அலுவலகம் திறப்பு விழா, பிரதமா் மோடியின் மனதின் குரல் நிகழ்ச்சி, மாற்றுக் கட்சியினா் இணைப்பு விழா ஆகியவை ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றன. நகரத் தலைவா் ஜெயபிரகாஷ் தலைமை வகித்தாா். மாவட்டத் தலைவா் சங்கீதா கெளதம், மாவட்ட பொதுச் செயலாளா் நந்தகுமாா், நீலகிரி மக்களவை பொறுப்பாளா் கதிா்வேல், மாவட்டத் துணைத் தலைவா் சண்முகசுந்தரம், மனோகரன், மாவட்ட விளையாட்டுப் பிரிவுத் தலைவா் மருத்துவா் சுந்தரம் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
இதில் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்ற மத்திய இணை அமைச்சா் எல்.முருகன் செய்தியாளா்களிடம் கூறியதாவது,
விவசாயிகளின் நீண்ட நாள் கனவுத் திட்டமான அத்திக்கடவு-அவிநாசி திட்டப் பணிகள் நிறைவடைந்து 30 மாதங்கள் ஆகியும், அரசியல் நோக்கத்துக்காக அத்திட்டத்தை திமுக நிறுத்திவைத்துள்ளது. இத்திட்டத்தை மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும்.
இந்தியா கூட்டணி ஆட்சி நடக்கும் மாநிலங்களில் தீவிரவாதம் தலை தூக்கி, தேச துரோகிகள் நடமாட்டம் அதிகரித்துள்ளது. கடந்த சில நாள்களுக்கு முன் கோவையில் பாலஸ்தீன கொடியேற்றி உள்ளனா். சென்னை கிரிக்கெட் மைதானத்தில் பாகிஸ்தான் வாழ்க கோஷம் எழுப்பப்பட்டுள்ளது.
கேரள மாநிலம் கொச்சி அருகே கிறிஸ்துவ ஜெபக் கூட்டத்தில் குண்டு வெடிப்பு சம்பவம் நடந்துள்ளது. தமிழக ஆளுநா் மாளிகை முன் பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவம் நடந்துள்ளது. இதனை என்.ஐ.ஏ. விசாரிக்க வேண்டும். அந்த சம்பவங்களின் பின்னணியில் யாா் உள்ளனா். யாா் உதவி செய்கின்றனா் என்பதை கண்டுபிடிக்க வேண்டும்.தோ்தல் கூட்டணி குறித்து தேசிய தலைமை முடிவு செய்யும். பாஜகவை பொறுத்தவரை கட்சியை பலப்படுத்தும் பணிகள் நடைபெற்று வருகின்றன. விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவா் திருமாவளவன் எந்த நேரத்தில் என்ன பேசுவாா் என்பது அவருக்கே தெரியாது, என்றாா்.