திருப்பூரில் நூல் வியாபாரியிடம் ரூ. 1.59 கோடி மோசடி; கும்பல் கைது
Tirupur News- திருப்பூரில் நூல் வியாபாரியிடம் ரூ. 1.59 கோடி மோசடி செய்த கும்பலை போலீசார் கைது செய்தனர்.
Tirupur News,Tirupur News Today- அதிக பணத்திற்கு ஆசைப்பட வைத்து தூண்டில் போல் போட்டு நூல் வியாபாரியை ஏமாற்றிய கும்பலை தனிப்படை போலீசார் கைது செய்தனர். சதுரங்கவேட்டை பட பாணியில் இந்த சம்பவம் நடந்துள்ளது.
திருப்பூர் தாராபுரம் ரோடு குமரன்நகர் பகுதியை சேர்ந்த 52 வயதாகும் அங்குராஜ் நூல் கமிஷன் கடை நடத்தி வருகிறார். இவருடைய நண்பர் துரை என்கிற அம்மாசை. இவர் நூல் புரோக்கர் ஆவார்.
இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு அங்குராஜின் வாட்ஸ்அப் எண்ணுக்கு விஜயகார்த்திக் என்பவர் தொடர்பு கொண்டு பேசியிருக்கிறார், தான், தெலுங்கானா மாநிலாம் ஹைதராபாத்தில் தனியார் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர், வியாபார ரீதியாக வெளிநாட்டில் இருந்து கோடிக்கணக்கான பணம், எனது நிறுவனத்தின் வங்கி கணக்கில் இருப்பில் இருக்கிறது, எனது நிறுவனத்தின் பெயரில் கோவை, திருப்பூர், ஈரோடு போன்ற ஊர்களில் கட்டுமான பணி நடந்து வருகிறது. கட்டுமான பொருட்கள் மற்றும் இதர செலவுக்கு ரொக்கமாக பணம் தேவைப்படுகிறது. நீங்கள் கொடுக்கும் பணத்துக்கு 2 மடங்கு தொகையை ஆன்லைனில் உங்கள் (அங்குராஜ்) வங்கி கணக்குக்கு பணப்பரிமாற்றம் செய்து வைக்கிறேன் என்று கூறியுள்ளார்.
இதை கொஞ்சம் கூட உண்மையா, பொய்யா என்று யோசிக்காத அங்குராஜ் மற்றும் அம்மாசை இருவரும் சேர்ந்து தங்களுக்கு தெரிந்தவர்களிடம் இருந்து ரூ.1 கோடியே 69 லட்சத்தை ஏற்பாடு செய்துள்ளனர். அதிகப்படியான பணத்துக்கு ஆசைப்பட்டு பணத்தை ஏற்பாடு செய்த அவர்கள் அதை கட்டுக்கட்டாக அடுக்கி வைத்து வீடியோ எடுத்து அதை விஜயகார்த்திக் கொடுத்த செல்போன் எண்ணுக்கு கடந்த ஜனவரி 30-ந் தேதி அனுப்பி வைத்துள்ளனர்.
இந்த வீடியோவை அனுப்பி வைத்த சிறிது நேரத்தில் அங்குராஜின் கடைக்கு கார்களில் ஒரு கும்பல் திபுதிபுவென வந்தது. தாங்கள் சென்னை அமலாக்கத்துறை அதிகாரிகள் என்று கூறி மிரட்டியதுடன், இந்த கடையில் கணக்கில் இல்லாத கருப்பு பணம் கைமாறுவதாக ரகசிய தகவல் கிடைத்துள்ளது. எனவே சோதனை நடத்த வந்துள்ளோம் எனக்கூறி கடையை சோதனையிட்டனர். அப்போது கடைக்குள் இருந்த ரூ.1 கோடியே 69 லட்சத்தை எடுத்துக்கொண்டு சென்றுவிட்டார்கள்
அவர்கள் பணத்தை கைப்பற்றி சென்ற பின்னர் தான் போலி அமலாக்கத்துறையினர் என்பது அங்குராஜுக்கு தெரியவந்தது. இதுகுறித்து திருப்பூர் தெற்கு போலீஸ் நிலையத்தில் அங்குராஜ் உடனே புகார் கொடுத்தார். 4 தனிப்படைகள் அமைத்து போலீசார் பணத்தை அபேஸ் செய்த கும்பலை தேடினார்கள்.
இந்தநிலையில் இந்த சம்பவத்தில் ஈடுபட்ட 5 பேரை நேற்று திருப்பூர் தெற்கு போலீசார் கைது செய்தனர். சென்னை தாம்பரத்தை சேர்ந்த சுரேந்திரநாத் என்கிற குப்தா (45), கோவை சுண்டக்காமுத்தூர் ராமசெட்டிப்பாளையத்தை சேர்ந்த ராஜசேகர் (39), கோவை டாடாபாத்தை சேர்ந்த லோகநாதன் (41), நாமக்கல் மாவட்டம் கல்லாங்காட்டு வலசு பகுதியை சேர்ந்த ஜெயச்சந்திரன் (37), சேலம் மாவட்டம் மேட்டூரை சேர்ந்த கோபிநாத் (46) ஆகியோர் கைது செய்யப்பட்டனர். ஜெயச்சந்திரன் என்பவர் விஜயகார்த்திக் என்று கூறி அங்குராஜிடம் மோசடி செய்தது தெரியவந்தது.
இதையடுத்து 5 பேரிடம் இருந்து ரூ.88 லட்சத்து 66 ஆயிரம் ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் அபேஸ் செய்த பணத்தில் உடனடியாக சுரேந்திரநாத் ரூ.15 லட்சத்து 57 ஆயிரத்திற்கு ஒரு சொகுசு கார் வாங்கி இருக்கிறார். இதேபோல் ஜெயச்சந்திரன் ரூ.5 லட்சத்தில் சொகுசு கார் வாங்கி உள்ளார். இது தவிர 3 விலையுயர்ந்த செல்போன்கள் வாங்கியுள்ளனர். அவை அனைத்தையும் போலீசார் மீட்டனர். இந்த சம்பவத்தில் ஈடுபட்ட மேலும் 5 பேரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.