திருப்பூர் மாவட்டத்தில், நாளை( ஆகஸ்ட் 3ம் தேதி) உள்ளூர் விடுமுறை; கலெக்டர் அறிவிப்பு
Tirupur News,Tirupur News Today- தீரன் சின்னமலையின் நினைவு தினத்தை முன்னிட்டு, நாளை, ஆகஸ்ட் 3ம் தேதி, திருப்பூர் மாவட்டத்தில் உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.;
Tirupur News,Tirupur News Today- ஆங்கிலேயரை எதிர்த்து போராட்டிய தீரன் சின்னமலை நினைவு தினத்தை முன்னிட்டு, நாளை (3ம் தேதி) திருப்பூர் மாவட்டத்தில் உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
சுதந்திர போராட்ட வீரர்களில் பல தீரச்செயல்களால் அறியப்பட்டவர் தீரன் சின்னமலை. ஈரோடு மாவட்டம் காங்கயம் அருகே உள்ள மேலப்பாளையம் என்னும் ஊரில் ரத்னசாமி கவுண்டர் மற்றும் பெரியாத்தா தம்பதிக்கு மகனாக, கடந்த 1756-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 17-ம் தேதி பிறந்தார். அவருக்கு பெற்றோர் வைத்த பெயர் தீர்த்தகிரி கவுண்டர்.
தீர்த்தகிரி கவுண்டர் அவர்களின் பிறப்பிடமான கொங்கு நாடு மைசூர் மன்னர் ஆட்சியில் இருந்ததால், அந்நாட்டின் வரிப்பணம், அவரது அண்டைய நாடான சங்ககிரி வழியாக மைசூர் அரசுக்கு எடுத்து செல்லப்படும். ஒருநாள் தனது நண்பர்களுடன் வேட்டைக்கு சென்ற தீர்த்தகிரி, அந்த வரிப்பணத்தை பிடுங்கி, ஏழை, எளிய மக்களுக்கு வினியோகம் செய்தார். இதை தடுத்த தண்டல்காரர்கள் கேட்ட போது, "சென்னிமலைக்கும், சிவன்மலைக்கும் இடையில் ஒரு சின்னமலை பறித்ததாக மைசூர் மன்னர் ஐதர் அலியிடம் சொல்" என்று சொல்லி அனுப்பினார்.
அன்று முதல், அவர் 'தீரன் சின்னமலை' என்று அழைக்கப்பட்டார். பின்னர் ஆங்கிலேய ஏகாதிபத்தியத்தை எதிர்க்க மன்னர் திப்பு சுல்தானுடன் இணைந்து 3 போர்களில் வெற்றி கண்டார். இதையடுத்து திப்புசுல்தான் மறைவுக்கு பிறகும் ஆங்கிலேயர்களை எதிர்த்து படை திரட்டி தொடர்ந்து போராடினார். இதன் தொடர்ச்சியாக 1801-ம் ஆண்டில், பிரெஞ்சுக்காரரான கர்னல் மாக்ஸ் வெல் தலைமையில் ஆங்கிலேயர்களை பவானி காவிரிக்கரையில் எதிர்த்த அவர் வெற்றிக் கண்டார்.
அந்த வெற்றியைத் தொடர்ந்து, 1802-ம் ஆண்டில் சென்னிமலைக்கும் சிவன் மலைக்குமிடையே நடந்த போரில் சிலம்பமாடி ஆங்கிலப்படையைத் தவிடுபொடியாக்கி, 1803-ம் ஆண்டில் அறச்சலூரில் உள்ள கர்னல் ஹாரிசின் ஆங்கிலப்படையை கையெறிகுண்டுகள் வீசி வெற்றிக் கண்டார்.
ஆங்கிலேயர்கள் பலரையும் தோல்விக்குள்ளாக்கி, அவர்களை தலைகுனியச் செய்த தீரன் சின்னமலையை சூழ்ச்சியால் வீழ்த்த எண்ணிய ஆங்கிலேயர்கள், அவரது சமையல்காரருக்கு ஆசை வார்த்தைகள் காட்டி, அந்த மாவீரனையும் மற்றும் அவரது சகோதரர்களையும் கைது செய்தனர். கைது செய்து அவர்களை, சங்ககிரிகோட்டைக்கு கொண்டு சென்ற ஆங்கிலேயர்கள் கடந்த 1805-ம் ஆண்டு ஜூலை மாதம் 31-ம் தேதி தூக்கிலிட்டனர். தம்பிகளுடன், தீரன் சின்னமலையும் வீரமரணமடைந்தார். தீரன் சின்னமலை மரணம் அடைந்த நினைவு தினம் ஜூலை 31.
அந்த மாவீரரின் வீரம், அவரது தீரத்தை போற்றும் வகையில், நாளை திருப்பூர் மாவட்டத்தில் அரசு அலுவலகங்கள், பள்ளிகள், கல்லூரிகளுக்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு மாற்றாக, வரும் 26ம் தேதி ( சனிக்கிழமை) பணி நாளாக இருக்கும் எனவும், கலெக்டர் கிறிஸ்துராஜ் தெரிவித்துள்ளார்.