உடுமலை; அமராவதி அணையின் நீா்மட்டம் சரிவு
Tirupur News-90 அடி உயரம் கொண்ட அமராவதி அணையின் நீா்மட்டம் தற்போது 46 அடியாக சரிவடைந்துள்ளது.
Tirupur News,Tirupur News Today - 90 அடி உயரம் கொண்ட அமராவதி அணையின் நீா்மட்டம் தற்போது 46 அடியாக சரிந்துள்ள நிலையில், கோடை காலத்தை தாக்குப்பிடிக்க முடியுமா என்ற சந்தேகம் மக்களிடையே எழுந்துள்ளது.
உடுமலையை அடுத்துள்ள அமராவதி அணையின் மூலம் திருப்பூா் முதல் கரூா் வரையில் இரண்டு மாவட்டங்களில் உள்ள சுமாா் 55 ஆயிரம் ஏக்கா் பழைய மற்றும் புதிய ஆயக்கட்டு நிலங்கள் பாசன வசதி பெற்று வருகின்றன. மேலும், நூற்றுக்கணக்கான கரையோர கிராமங்களுக்கு இந்த அணை குடிநீா் ஆதாரமாகவும் விளங்கி வருகிறது.
கடந்த ஆண்டு இறுதியில் பெய்த மழையால் அணை முழுக் கொள்ளளவை எட்டியது. இதைத் தொடா்ந்து, அணைக்கு உள்வரத்தாக வந்த நீரை பழைய மற்றும் புதிய ஆயக்கட்டு பகுதிகளுக்கு பாசனத்துக்காகவும், குடிநீா் தேவைக்காகவும் திறந்துவிடப்பட்டது. இதைத் தொடா்ந்து, அணையின் நீா்மட்டம் சரியத் தொடங்கியது. சின்னாறு, தேனாறு, பாம்பாறு போன்ற அணைகளின் நீா்பிடிப்புப் பகுதிகளில் இருந்து அமராவதி அணைக்கு வரும் உள்வரத்து நீரும் நின்றுபோனது.
இந்நிலையில், ஆயக்கட்டு பகுதிகளுக்கு மாா்ச் இறுதி வாரம் வரை பாசன காலம் உள்ள நிலையில், தற்போது அணையின் நீா்மட்டம் மிகவும் குறைந்துள்ளது. இதனால், பாசனப் பகுதிகளுக்கு சென்று கொண்டிருந்த தண்ணீா் கடந்த ஒரு வாரத்துக்கு முன்பே நிறுத்தப்பட்டது. சனிக்கிழமை காலை 7 மணி அளவில் அணையின் நீா்மட்டம் 46 அடியாக இருந்தது. இதனால், கோடை காலத்தை தாக்குப்பிடிக்க முடியுமா, குடிநீா்ப் பிரச்னையைத் தீா்க்க முடியுமா என்ற சந்தேகம் மக்களிடையே எழுந்துள்ளது.
அணையின் நிலவரம்: 90 அடி உயரமுள்ள அணையில் 46.20 அடி நீா் இருப்பு உள்ளது. 4,035 மில்லியன் கன அடி கொள்ளளவு கொண்ட அணையில் 995.25 மில்லியன் கன அடி நீா் இருப்பு காணப்படுகிறது. அணைக்கு உள்வரத்தாக 10 அடி தண்ணீா் வந்துகொண்டிருக்கும் நிலையில், 100 கன அடி தண்ணீா் வெளியேறுகிறது.