உடுமலை அமராவதி அணை நீர்மட்டம் ‘கிடுகிடு’ சரிவு; விவசாயிகள் கவலை
Tirupur News,Tirupur News Today- உடுமலையை அடுத்துள்ள அமராவதி அணையின் நீர்மட்டம் வெகுவாக குறைந்துள்ளதால், விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.;
Tirupur News,Tirupur News Today- திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே அமராவதி அணை உள்ளது. 90 அடி உயரம் கொண்ட இந்த அணை மூலம் திருப்பூர், கரூர் மாவட்டங்களில் சுமார் 55 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. நூற்றுக்கணக்கான கிராமங்கள் குடிநீர் வசதி பெறுகின்றன.
அமராவதி அணை பழைய ஆயகட்டு பகுதிகளுக்கு ஆற்று வழியாகவும் புதிய ஆயக்கட்டு பகுதிகளுக்கு பிரதான கால்வாய் வழியாகவும் தண்ணீர் திறந்து விடப்படுகிறது. இது தவிர கல்லாபுரம், ராம குளம் வாய்க்காலிலும் ஆண்டு முழுவதும் தண்ணீர் திறக்கப்படுகிறது. ஆண்டுதோறும் ஜூன் முதல் செப்டம்பர் வரையில் தென்மேற்கு பருவமழை காலத்தில் பெய்யும் மழை அணைக்கு முக்கிய நீர் ஆதாரமாக உள்ளது. மேற்கு தொடர்ச்சி மலையில் தேனாறு, கூட்டாறு , சின்னாற்றில் கிடைக்கும் தண்ணீர் தூவானம் அருவி வழியாக அணைக்கு வந்து சேர்கிறது. வடகிழக்கு பருவமழை காலமான அக்டோபர் முதல் டிசம்பர் வரையும் கணிசமான நீர்வரத்து இருக்கும்.
இந்நிலையில், நடப்பாண்டு தென்மேற்கு பருவமழை போதிய அளவு பெய்யவில்லை. இதனால் அணை நீர்மட்டம் முழு கொள்ளளவு எட்ட வில்லை. கடந்த ஆண்டு இதே நாளில் 88.19 அடிக்கு நீர்மட்டம் இருந்தது .தொடர்ந்து 40 நாட்களுக்கும் மேலாக அணையில் முழு கொள்ளளவில் நீர்மட்டம் இருந்தது. 700 கன அடிக்கும் மேல் உபரிநீர் திறந்து விடப்பட்டது.
தற்போது அணையில் 55.88 அடிக்கு நீர்மட்டம் உள்ளது. 250 கன அடி நீர் வந்து கொண்டிருக்கிறது. 259 கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது.
இதுகுறித்து விவசாயிகள் கூறுகையில், அணையில் தற்போது 55 அடிக்கு அதிகமாக நீர்மட்டம் இருந்தாலும் இது போதுமானதாக இல்லை . இந்த மாதத்தில் அணை நிரம்பி வழிந்து இருக்க வேண்டும். தென்மேற்கு பருவமழை இனி பெய்யுமா என தெரியவில்லை. பெய்தாலும் அணை நிரம்புவது கடினம்தான். இன்னும் ஓராண்டுக்கு தாக்கு பிடிக்க வேண்டும். தொடர்ந்து பாசனத்துக்கு தண்ணீர் வெளியேற்றும் போது நீர்மட்டம் வெகுவாக குறைந்து விடும் . கோடைகாலத்தில் வறண்ட நிலைக்கு சென்று விடும். இதனால் குடிநீர் பற்றாக்குறை ஏற்பட வாய்ப்புள்ளது. அமராவதி அணையை நம்பி உள்ள நெல், கரும்பு விவசாயிகளும் பாதிக்கப்படுவர். எனவே சாகுபடி குறைய வாய்ப்புள்ளது, என்றனர்.
அமராவதி அணைப்பகுதியில் ஜனவரி - பிப்ரவரி மாதத்தில் நடப்பாண்டு ஒரே நாள் மட்டும் 7.75 மி.மீ., மழை பெய்தது.அதே போல் மார்ச் முதல் மே வரையிலான கோடை கால மழை பொழிவு 156.04 மி.மீ., மட்டுமே பெய்துள்ளது. ஜூன் முதல் செப்டம்பர் வரையிலான தென் மேற்கு பருவ மழை காலத்தில் கடந்த ஆண்டு 266.19 மி.மீ., மழை கிடைத்துள்ளது. ஆனால் நடப்பாண்டு ஜூன் 14.73 மி.மீ., ஜூலை 12.76 மி.மீ., ஆகஸ்ட் 6.24 மி.மீ., என இதுவரை 33.76 மி.மீ.,மழை மட்டுமே கிடைத்துள்ளது. கடந்த ஆண்டை விட நடப்பாண்டு 8 மாதங்களில் 229.45 மி.மீ., மழை குறைந்துள்ளது.
இது குறித்து வேளாண் துறை அதிகாரிகள் கூறியதாவது,
பருவ மழை குறைந்ததால், வறட்சி நிலை ஏற்பட்டுள்ளது. அணைகளின் நீர்மட்டமும் பெருமளவு குறைந்து காணப்படுகிறது. இதனால் வேளாண் பயிர் சாகுபடி துவக்குவதிலும், நிலைப்பயிர்களை காப்பதிலும் சிக்கல் ஏற்பட்டுள்ளது. செப்டம்பர் மாதத்தில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக, வானிலை மையம் கணித்துள்ளது. அடுத்து அக்டோபர் முதல் டிசம்பர் வரையிலான வட கிழக்கு பருவ மழை காலத்தில் கடந்த ஆண்டு 399.48 மி.மீ., மழை கிடைத்துள்ளது. இதனை விவசாயிகள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர், என்றனர்.