அரசு இசைப்பள்ளியில் மாணவர் சேர்க்கை துவங்கியது

உடுமலை அரசு இசைப்பள்ளியில் இந்த ஆண்டுக்கான மாணவர் சேர்க்கை துவங்கியது

Update: 2024-10-08 07:10 GMT

தமிழக அரசு கலை பண்பாட்டுத்துறை சார்பில், இசை, நாட்டியம் ஆகியவற்றை பயிற்றுவிக்கும் அரசு இசைக்கல்லுாரிகள் மற்றும் மாவட்ட அளவில் இசைப்பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன.

இந்நிலையில் ராமநாதபுரத்தில் செயல்பட்டு வந்த, அரசு இசைப்பள்ளி நிர்வாக காரணங்களுக்காக, திருப்பூர் மாவட்டம் உடுமலையில், இந்த ஆண்டு முதல் செயல்பட உள்ளது. உடுமலை தளி ரோட்டிலுள்ள தாகூர் மாளிகையில், அரசு இசைப்பள்ளி செயல்பட துவங்கியது.

இந்த இசைப்பள்ளியில் இந்த ஆண்டுக்கான் மாணவர் சேர்க்கை தொடங்கியது.

இது குறித்து இசைப்பள்ளி முதல்வர் சரவண மாணிக்கம் தெரிவித்ததாவது: அரசு இசைப்பள்ளியில், தமிழகத்தின் பாரம்பரிய கலைகளான, குரலிசை (பாட்டு), நாதஸ்வரம், தவில், தேவாரம், பரதநாட்டியம், வயலின், மிருதங்கம் ஆகிய கலைகளில் பயிற்சியளிக்கப்படுகிறது.

இந்த பயிற்சி வகுப்புகள், வார நாட்களில் காலை, 10:00 மணி முதல், மாலை, 4:00 மணி வரை பள்ளி செயல்படும்.

இந்த வகுப்புகளில்13 வயது முதல், 25 வயது வரை உடைய, ஆண், பெண் இரு பாலரும் பயிற்சியில் சேரலாம்.

பயிற்சி காலம், 3 ஆண்டுகள்; பயிற்சி முடிவில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு அரசு சான்றிதழ் வழங்கப்படும். பயிற்சி கட்டணம் இல்லை. சேர்க்கை கட்டணமாக, ஆண்டுக்கு ரூ.350 செலுத்த வேண்டும்.

பள்ளியில் சேரும், மாணவ, மாணவியருக்கு இலவச பேருந்து பாஸ் வழங்கப்படும். இசைப்பயிற்சி பள்ளியில் பயிலும் மாணவர்களுக்கு மாதம் தோறும் கல்வி உதவி தொகையாக, ரூ.400 வழங்கப்படும்.

தற்போது, அரசு இசைப்பள்ளியில், மாணவ, மாணவியர் சேர்க்கை துவங்கியுள்ளது. இந்த பாரம்பரியம் மிக்க கலைகளை பயில விருப்பம் உள்ள மாணவர்கள், சேர்ந்து கொள்ளலாம். சேர்க்கை குறித்த விபரங்களுக்கு, 95664 73769; 94432 07376 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம் என தெரிவித்துள்ளார்

Tags:    

Similar News