ஆற்றின் கரையில் மோட்டார் நீர் உறிஞ்சினால் நடவடிக்கை; அதிகாரிகள் எச்சரிக்கை
Tirupur News-ஆற்றின் கரையில் கிணறுகள் அமைத்தும் மோட்டார்களில் நீர் ஊறிஞ்சபடுவது கண்டறியப்பட்டால் விவசாய மின் இணைப்பை துண்டிக்க மின்வாரியத்திற்கு பரிந்துரைக்கப்படும்.;
Tirupur News,Tirupur News Today- திருப்பூர் மாவட்டம் உடுமலை அமராவதி அணை வாயிலாக திருப்பூர் ,கரூர் மாவட்டத்தில் 54, 637 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. வழி ஓரத்தில் உள்ள கிராமங்களுக்கும் குடிநீர் ஆதாரமாக உள்ளது.
அமராவதி அணையில் துவங்கி கரூர் திருமுக்கூடலூர் பகுதியில் காவிரி ஆற்றுடன் அமராவதி ஆறு இணைகிறது. திருப்பூர் ,கரூர் மற்றும் திண்டுக்கல் மாவட்டங்கள் வழியாக 148 கி.மீ தூரம் பயணிக்கும் அமராவதி ஆற்றின் இரு கரைகளிலும் நூற்றுக்கணக்கான மின் மற்றும் ஆயில் மோட்டார் வைத்து சட்ட விரோதமாக நீர் எடுக்கப்படுகிறது.விவசாயத்திற்கு மட்டுமின்றி தென்னைநார் தொழிற்சாலை உள்ளிட்ட பல்வேறு தொழிற்சாலைகளுக்கும் நீர் எடுக்கப்படுகிறது. ஒரு சில பகுதிகளில் ஆற்றுக்குள்ளேயே குழி தோண்டி மோட்டார்கள் அமைக்கப்பட்டுள்ளன.
பாசனம் மற்றும் குடிநீருக்கு திறக்கப்படும் நீர் பெரும் அளவு திருடப்படுவதால் பாசன நிலங்களில் வறட்சியும், அமராவதி ஆற்றின் கரையோர கிராமங்களில் குடிநீர் தட்டுப்பாடும் ஏற்பட்டுள்ளது. எனவே அமராவதி ஆற்றில் சட்ட விரோதமாக அமைக்கப்பட்டுள்ள மோட்டார்களை அகற்ற வேண்டும் என விவசாயிகளும் உள்ளாட்சி நிர்வாகத்தினரும் கோரிக்கை விடுத்து வருகின்றனர். இதையடுத்து ஆற்றில் சட்ட விரோதமாக அமைக்கப்பட்டுள்ள மின் மோட்டார்களை அகற்றவும் முறைகேடாக பெறப்பட்டுள்ள மின் இணைப்புகளை துண்டிக்கும் பணியிலும் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.
இது குறித்து நீர்வளத்துறை அதிகாரிகள் கூறியதாவது,
உடுமலை, மடத்துக்குளம் ,தாராபுரம், அரவக்குறிச்சி உள்ளிட்ட வழியோரத்தில் ஆற்றின் இரு புறமும் அதிகாரிகள் குழு ஆய்வு செய்து வருகிறது. முறைகேடாக அமைக்கப்பட்டுள்ள மோட்டார்கள்,பைப் கட்டுமானங்களை அகற்றி பறிமுதல் செய்யப்படுவதோடு போலீசில் புகார் தெரிவித்து வழக்கு பதிவு செய்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
ஆற்றின் கரையில் கிணறுகள் அமைத்தும் மோட்டார்கள் அமைத்தும் நீர் ஊறிஞ்சபடுவது கண்டறியப்பட்டால் விவசாய மின் இணைப்பை துண்டிக்க மின்வாரியத்திற்கு பரிந்துரை செய்யப்பட்டு அந்தப் பணிகளும் நடந்து வருகிறது. ஆற்றில் சட்ட விரோதமாக நீர் எடுத்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றனர்.