குருவி வேட்டைக்கு சென்றவரை அடித்துக் கொன்ற கும்பல்; உடுமலை அருகே பரபரப்பு

Tirupur News- உடுமலை அருகே குருவி வேட்டைக்கு சென்றவரை திருடர்கள் என அடித்துக்கொன்ற கும்பல் குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.;

Update: 2023-12-29 08:28 GMT

Tirupur News- குருவி வேட்டைக்கு சென்றவரை அடித்துக் கொன்ற கும்பல் (மாதிரி படம்)

Tirupur News,Tirupur News Today-திருப்பூர் மாவட்டம், உடுமலை அருகே தாந்தோணி பகுதியில், பழங்குடி இனத்தைச் சேர்ந்த செங்கோட்டையன், 55, மற்றும் குமார், 45, ஆகியோர், குருவி வேட்டைக்கு நேற்று முன்தினம் மாலை சென்றனர்.

பொள்ளாச்சி ஆர்.பொன்னாபுரம் பகுதியைச் சேர்ந்த இவர்கள், 'கவண்' கல் வைத்து குருவியை தாக்கிய போது, தவறுதலாக, செல்வகுமார் என்பவரது தோட்டத்து, இரும்புத்தடுப்பில் விழுந்தது. சத்தம் கேட்டு, அங்கிருந்த கோழிகள் பறந்தன. இதையடுத்து, அங்கிருந்த பலர் சேர்ந்து, கோழி திருட வந்துள்ளனர் என கருதி இருவரையும், தென்னை மரத்தில் கட்டி வைத்து, தென்னை மட்டை, ரீப்பர், கற்களால் தாக்கினர். இதில், நிலை குலைந்து காணப்பட்ட இருவரையும், அக்கும்பல் தோட்டத்திலிருந்து விரட்டியது.

செங்கோட்டையன், குமார் பலத்த காயங்களுடன் உடுமலை அரசு மருத்துவமனைக்கு துாக்கி வரப்பட்டனர். பரிசோதித்த டாக்டர்கள், செங்கோட்டையன் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

இத்தகவல் கிடைத்ததும், உடுமலை பஸ் ஸ்டாண்ட், பொள்ளாச்சி, திருப்பூர் உள்ளிட்ட பகுதிகளில் பழங்குடி நாடோடிகளாக வாழ்ந்து வருவோர், அரசு மருத்துவமனையில் கூடினர்.

'கொக்கு, குருவி வேட்டைக்கு சென்றவர்களை, அடித்துக்கொலை செய்து விட்டனர்' என ஆக்ரோஷமாக கூறி போலீசாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். உடுமலை போலீசார், கொலை, எஸ்.சி., - எஸ்.டி., வன்கொடுமை சட்டம் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து, குற்றவாளிகளை தேடி வருகின்றனர்.

Tags:    

Similar News