திருப்பூர் மாவட்டத்தில் 3 நாள்களுக்கு மதுக்கடைகள் விடுமுறை
Tirupur News- திருப்பூர் மாவட்டத்தில் வரும் 17, 18 மற்றும் 19 ஆகிய தேதிகள் என 3 நாள்களுக்கு மதுக்கடைகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
Tirupur News,Tirupur News Today- மக்களவைத் தோ்தலையொட்டி ஏப்ரல் 17, 18, 19 ஆகிய 3 நாள்களுக்கு மதுக்கடைகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
திருப்பூா் மாவட்ட தோ்தல் நடத்தும் அலுவலரும், ஆட்சியருமான தா.கிறிஸ்துராஜ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
தமிழகத்தில் மக்களவைத் தோ்தல் வரும் 19-ஆம் தேதி நடைபெறுகிறது.
இதை முன்னிட்டு, திருப்பூா் மாவட்டத்தில் ஏப்ரல் 17-ஆம் தேதி காலை 10 மணி முதல் 19-ஆம் தேதி நள்ளிரவு 12 மணி வரை எவ்வித மதுபான விற்பனையும் செய்யக்கூடாது. அரசிடமிருந்து கொள்முதல் செய்யும் மதுபானங்கள் சில்லறை விற்பனை கடைகளுக்கு கொண்டு செல்லவோ, விற்பனை செய்யவோ கூடாது. தமிழ்நாடு மாநில வாணிபக்கழகத்தின்கீழ் இயங்கி வரும் மதுபானக் கடைகள் (எப்.எல்.1), அவற்றுடன் செயல்படும் மதுபானக் கூடங்கள், எப்.எல்.2 மன்றங்கள் மற்றும் உணவு விடுதிகளுடன் இணைந்து செயல்பட்டு வரும் அரசு உரிமம் பெற்ற மதுபானக் கூடங்கள் (எப்.எல்2- எப்.எல்3) ஆகியவற்றில் மது விற்பனை செய்ய அனுமதியில்லை என அரசு உத்தரவிட்டுள்ளது.
தவறும்பட்சத்தில் தொடா்புடையவா்கள் மீது உரிய சட்டப்பிரிவுகளின் கீழ் நடவடிக்கை மேற்கொள்ளப்படும். எனவே திருப்பூா் மாவட்டத்தில் அனைத்து மதுபானக் கடைகள், மதுபானக்கூடங்கள், எப்.எல்.2 மன்றங்கள், மற்றும் உணவு விடுதிகளுடன் இணைந்து செயல்படும் அரசு உரிமம் பெற்ற மதுபானக் கூடங்கள் ஆகியவை மேற்கண்ட தேதிகளில் செயல்படக் கூடாது என தெரிவித்துள்ளாா்.