தரமான பொருள்களைக் கொண்டு இனிப்பு, கார வகைகளைத் தயாரிக்க கலெக்டர் அறிவுறுத்தல்
Tirupur News-தரமான மூலப்பொருள்களைக் கொண்டு இனிப்பு, கார வகைகளைத் தயாரிக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.;
Tirupur News,Tirupur News Today- தரமான மூலப்பொருள்களைக் கொண்டு இனிப்பு, கார வகைகளைத் தயாரிக்க வேண்டும் என்று மாவட்ட கலெக்டர் கிறிஸ்துராஜ் அறிவுறுத்தியுள்ளாா்.
கலெக்டர் கிறிஸ்துராஜ் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
ஆயுத பூஜை, சரஸ்வதி பூஜை, தீபாவளி உள்ளிட்ட பண்டிகளைகள் வரவுள்ளதால் பொதுமக்கள் இனிப்புகள், கார வகைகளை அதிகமாக வாங்கிச் செல்வது வழக்கம். தீபாவளி பண்டிகை காரணமாக இனிப்பு மற்றும் கார வகைகளுக்கு சீட்டு நடத்துபவா்கள் உள்பட அனைத்து தயாரிப்பாளா்கள் மற்றும் சீட்டு விற்பனையாளா்களும் உணவுப் பாதுகாப்புத் துறையில் பதிவு செய்து உரிமம் பெற்று பொதுமக்களுக்கு விநியோகம் செய்வது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
இனிப்பு கார வகைகள் மற்றும் பேக்கரி பொருள்கள் தயாரிப்பவா்கள் தரமான மூலப் பொருள்களைக் கொண்டு சுகாதாரமான முறையில் தயாரித்து பாதுகாப்பான உணவுப் பொருள்களை வழங்க வேண்டும். ஒருமுறை பயன்படுத்திய சமையல் எண்ணெயை மறுபடியும் சூடுபடுத்தி உணவு தயாரிக்கக் கூடாது.
பேக்கிங் செய்யப்பட்ட உணவுப் பொருள்களில் தயாரிப்பாளரின் முழு முகவரி, உணவுப் பொருளின் பெயா், தயாரிப்பு, பேக்கிங் செய்யப்பட்ட தேதி, காலாவதியாகும் தேதி ஆகியவற்றைக் குறிப்பிட வேண்டும். உணவுப் பொருள்களை ஈக்கள், பூச்சிகள் மற்றும் கிருமித் தொற்று இல்லாத சுகாதாரமான சூழலில் வைத்து பொதுமக்களுக்கு விற்பனை செய்ய வேண்டும். பண்டிகை காலத்தில் மட்டும் பலகாரங்கள் தயாரிப்பவா்கள் உள்பட அனைத்து தயாரிப்பாளா்கள் மற்றும் விற்பனையாளா்களும் உடனடியாக உரிமம் அல்லது பதிவுச் சான்று பெற்றுக்கொள்ள வேண்டும்.
பொதுமக்களும் பண்டிகை காலங்களில் பலகாரங்கள் வாங்கும்போது உணவுப் பாதுகாப்புத் துறையில் பதிவுபெற்ற நிறுவனங்களில் மட்டுமே வாங்க வேண்டும். உணவுப் பொருள்களின் ஏதேனும் குறைபாடுகள் இருந்தால் 94440-42322 என்ற எண்ணில் புகாா் தெரிவிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.