திருப்பூரில் ‘டாஸ்மாக்’ மது விற்பனையாளர்கள் 6 பேர் ‘சஸ்பெண்ட்’
Tirupur News,Tirupur News Today- திருப்பூரில், அனுமதிக்கப்பட்ட நேரத்தை விட கூடுதலான நேரத்தில், மது விற்பனையில் ஈடுபட்ட புகாரில், 6 பேரை டாஸ்மாக் அதிகாரி சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டார்.;
Tirupur News,Tirupur News Today- தமிழகத்தில், ‘டாஸ்மாக்’ மதுபானம் விற்பனை மூலம், ஆண்டுதோறும் பல ஆயிரக்கணக்கான கோடி ரூபாய், தமிழக அரசுக்கு வருவாயாக கிடைத்து வருகிறது. டாஸ்மாக் மதுபான விற்பனையில் சென்னை, கோவை, மதுரை, திருச்சி போன்ற பெரு நகரங்களை போலவே, திருப்பூர் மாவட்டமும், சரக்கு விற்பனையில் ‘டாப்’ லெவலில் இருந்து வருகிறது. குறிப்பாக தீபாவளி, பொங்கல் போன்ற பண்டிகை காலகட்டங்களில் சென்னையை போல, சரக்கு விற்பனையில் முன்னிலை பெற்ற மாவட்டமாக, திருப்பூர் பல ஆண்டுகளாக இருந்து வருகிறது. இதற்கு முக்கிய காரணம், தொழிலாளர்கள்தான். லட்சக்கணக்கான தொழிலாளர்கள் நிறைந்துள்ள திருப்பூரில், பலரும் மதுப்பழக்கம் கொண்டவர்களாக இருப்பதால், விற்பனை அமோகமாக நடக்கிறது.
இதனால், அதிக வருமானம் பெற விரும்பும் ‘டாஸ்மாக்’ நிர்வாகம் சார்ந்த ஊழியர்கள் சிலர் விதிமீறல்களில் ஈடுபடுவது குறித்து அவ்வப்போது புகார்கள் எழுகின்றன. அதனால், உரிய விசாரணை நடத்தி, அதிகாரிகள் தரப்பில் ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில், இப்போது ஆறு விற்பனையாளர்கள் ‘சஸ்பெண்ட்’ செய்யப்பட்டுள்ளனர்.
திருப்பூர் மாவட்டத்தில், அனுமதி இல்லாமல் ‘டாஸ்மாக்’ பார்கள் செயல்படுவதாகவும், அனுமதித்த நேரத்தை விட கூடுதல் நேரம் மதுபானங்கள் விற்பனை செய்யப்படுவதாகவும் திருப்பூர் மாவட்ட ‘டாஸ்மாக்’ மேலாளருக்கு புகார்கள் வந்தன. இந்த புகாரின் அடிப்படையில் கடந்த வாரம் திருப்பூர் மாவட்டம் முழுவதும் உள்ள டாஸ்மாக் பார்களில் அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர். இந்த சோதனையில் 18-க்கும் மேற்பட்ட டாஸ்மாக் பார்கள் அனுமதி இல்லாமல் செயல்பட்டது தெரியவந்தது. உடனடியாக அந்த பார்களுக்கு சீல் வைக்கப்பட்டது.
இந்தநிலையில் திருப்பூர், பல்லடம் ரோடு நொச்சிபாளையத்தில் ‘டாஸ்மாக்’ மதுக்கடை உள்ளது. இந்த கடையில் அனுமதிக்கப்பட்ட நேரத்தை மீறியதுடன், பாருக்குள் மதுவிற்பனை செய்ததாக புகார் எழுந்தது. சோதனையில் அது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து கடை விற்பனையாளர்கள் சண்முகநாதன், குமார், பாலசுப்ரமணியம், கார்த்திகேயன், காமராஜ், முருகானந்தம் ஆகியோரை மாவட்ட ‘டாஸ்மாக்’ மேலாளர் சுப்ரமணியம் ‘சஸ்பெண்ட்’ செய்து உத்தரவிட்டுள்ளார்.