திருப்பூரில் 432வது மராத்தான் போட்டியில் மாற்றுத்திறனாளி அசத்தல் வெற்றி
Tirupur News- திருப்பூரில் நடந்த 432வது மராத்தான் போட்டியில் வென்ற மாற்றுத்திறனாளி நம்பிக்கையை விதைப்பதே லட்சியம், என்கிறார்;
Tirupur News- திருப்பூரில் நடந்த மாரத்தான் போட்டி.
Tirupur News,Tirupur News Today- திருப்பூரில் நேற்று நடந்த மராத்தான் போட்டியில் பங்கேற்று ஓடிய மாற்றுத்திறனாளி கலைச்செல்வன், 10 கி.மீ., துாரத்தை 52 நிமிடங்களில் கடந்து, அனைவரது பாராட்டையும் பெற்றார். இது அவர் பங்கேற்கும் 432வது மராத்தான் போட்டி.
பெரம்பலுார் மாவட்டம், மேலப்புலியூரை சேர்ந்தவர் கலைச்செல்வன், 39; இடது கை இழந்த மாற்றுத்திறனாளி.
யங் இந்தியன்ஸ் சார்பில், திருப்பூரில் நேற்று நடந்த 'நம்ம திருப்பூர் மராத்தான்' போட்டியிலும் பங்கேற்ற இவர், 10 கி.மீ., ஆண்கள் பொதுப்பிரிவில் பங்கேற்று ஓடினார்; 52 நிமிடங்களில் வெற்றி இலக்கை அடைந்து, அனைவரின் பாராட்டையும் பெற்றார்.
கலைச்செல்வன் கூறியதாவது:
வாகன விபத்தில் சிக்கி, 12 வயதிலேயே இடதுகையை இழந்துவிட்டேன். 2012ல், கலெக்டராக இருந்த தரேஷ்அகமது, எங்கள் ஊரில் முதல் முறையாக விழிப்புணர்வு மராத்தான் நடத்தினார். எனக்கும் அதுதான் முதல் மராத்தான்; அதில் பங்கேற்று, இரண்டாமிடம் பிடித்தேன். மராத்தானில் தடம் பதிக்க, கலெக்டர்தான் காரணம்.
மாற்றுத்திறனாளிகள் வீட்டுக்குள் முடங்கிவிடக்கூடாது. ஒவ்வொருவருக்குள்ளும் வெவ்வேறு திறமை புதைந்துகிடக்கிறது. வீட்டைவிட்டு வெளியேவந்து, திறமையை வெளிப்படுத்தினால், சாதித்துக்காட்டலாம் என்கிற நம்பிக்கையை ஒவ்வொரு மாற்றுத்திறனாளிகள் மனதிலும் விதைப்பதற்காகவே, நான் ஓடிக்கொண்டிருக்கிறேன்.
எங்கு நடந்தாலும் செல்வேன்
தமிழகத்தில் எந்த மாவட்டத்தில், எந்த கிராமத்தில் மராத்தான் நடந்தாலும், சமூக வலைதளக் குழுக்கள் மூலம், எனக்கு தகவல் வந்துசேர்ந்துவிடும். உடனே புறப்பட்டுவிடு
"எனக்கு தகவல் வந்துசேர்ந்துவிடும். உடனே புறப்பட்டுவிடுவேன். உ.பி., கேரளா, பெங்களூரு உள்பட சில வெளிமாநிலங்களிலும், மராத்தான் ஓடியுள்ளேன். பாராலிம்பிக்கிலும் பங்கேற்றுவருகிறேன்.
40 வயதுக்குள் 400 மராத்தான் ஓடவேண்டும் என இலக்கு நிர்ணயித்திருந்தேன்; 39 வயதிலேயே இலக்கை கடந்துவிட்டேன். இது எனக்கு, 432வது மராத்தான்.
மற்ற மராத்தான்களைவிட யங் இந்தியன்ஸ் சார்பில் திருப்பூரில் நடத்தப்பட்டுள்ள இந்த மராத்தானில் பங்கேற்றதை பெருமையாக கருதுகிறேன். முதுகு தண்டுவடம் பாதித்த மாற்றுத்திறனாளிகள், காது கேளாத, வாய் பேசாத மாற்றுத்திறனாளிகளுக்கு பிரத்யேகமாக மராத்தான் நடத்தியது பாராட்டத்தக்கது. அனைத்து மாவட்டங்களிலும், மாற்றுத்திறனாளிகளுக்கு பிரத்யேக மராத்தான் நடத்தி, பரிசு வழங்கவேண்டும்.
தடைகளைத் தாண்டி பயணம்
இதுவரை, 4 தங்கம்; 8 வெள்ளி; 10 வெண்கல பதக்கங்கள் வென்றுள்ளேன். உ.பி.,யில் பாராலிம்பிக் விரைவில் நடைபெற உள்ளது. அதற்கான பயிற்சியிலும் தொடர்ந்து ஈடுபட்டுவருகிறேன். தடைகளை தாண்டி, எனது விளையாட்டு பயணம் தொடரும்.
மாற்றுத்திறனாளிகளுக்கு அரசு பணியில் இட ஒதுக்கீடு இருந்தாலும்கூட, நடைமுறைப்படுத்துவதில் சிக்கல் தொடர்கிறது. இட ஒதுக்கீட்டை பெறுவதில், மாற்றுத்திறனாளிகள் மத்தியிலும் போதிய விழிப்புணர்வு இல்லை. விளையாட்டில் சாதித்துக்கொண்டே, அரசு வேலை பெறவேண்டும் என்பதே எனது லட்சியம்.
இவ்வாறு, அவர் கூறினார்.