ஊத்துக்குளி அருகே 2,300 கிலோ அலுமினிய மின் கம்பிகளைத் திருடிய 4 பேர் கைது
Tirupur News-ஊத்துக்குளி அருகே மின்வாரியத்திற்கு சொந்தமான 2,300 கிலோ அலுமினிய மின் கம்பிகளைத் திருடிய 4 பேரை போலீசார் கைது செய்தனா்.;
Tirupur News,Tirupur News Today- திருப்பூரை அடுத்த ஊத்துக்குளி அருகே மின்வாரியத்திற்கு சொந்தமான 2,300 கிலோ அலுமினிய மின் கம்பிகளைத் திருடிய 4 பேரை போலீசார் கைது செய்தனா்.
திருப்பூா் மாவட்டம், ஊத்துக்குளி அருகே உள்ள அணைப்பாளையம் கிராமம் குள்ளாயூா் பதிவுக்காடு பகுதியில் பழைய மின் கம்பிகளை அகற்றிவிட்டு, புதிய மின் கம்பிகள் பொருத்தும் பணியை தமிழ்நாடு மின்சார வாரியம் மேற்கொண்டு வருகிறது.
இதற்காக, கடந்த வாரம் ரூ.5.12 லட்சம் மதிப்புடைய 2,300 கிலோ அலுமினிய கம்பிகளை மின்வாரிய நிா்வாகம் அந்தப் பகுதியில் கொண்டு வந்து வைத்தது. சில நாள்களுக்குப் பின்னா் வந்து பாா்த்தபோது அலுமினிய மின்கம்பிகள் திருட்டுப்போனது தெரியவந்தது.
இதுகுறித்து ஊத்துக்குளி உதவி மின் பொறியாளா் இளங்கோவன் ஊத்துக்குளி போலீசில் புகாா் அளித்திருந்தாா். அதன்பேரில் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினா். மேலும், அப்பகுதியில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமரா பதிவு காட்சிகளையும் ஆய்வு செய்தனா்.
இதில், மின்கம்பிகளை அவிநாசிபாளையம் பெருந்தொழுவு பகுதியைச் சோ்ந்த விக்னேஷ்குமாா் (27), சாலமன் (26), முத்துமணிகண்டன் (24) ஆகியோா் திருடிச்சென்றது தெரிய வந்தது. இதையடுத்து 3 பேரையும் போலீசார் கைது செய்தனா்.
மேலும், திருடிய அலுமினிய கம்பிகளை வாங்கியதாக கொடுவாய் பகுதியில் பழைய இரும்புக் கடை நடத்தி வரும் பொன்வேல் (47) என்பவரையும் போலீசார் உடனடியாக கைது செய்தனா். மேலும், கைது செய்யப்பட்டவர்கள் மேலும் வேறு இடங்களில் இதுபோன்ற அலுமினிய மின்கம்பிகளை திருடினார்களா, அவர்கள் மேல் வேறு திருட்டு வழக்குகள் உள்ளதா என்பது குறித்தும் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.