நீரின்றி காய்ந்து போன 3 ஆயிரம் ஏக்கா் நெல் வயல்கள்; விவசாயிகள் கவலை
Tirupur News- அமராவதி பழைய ஆயக்கட்டு பகுதிகளில் சுமாா் 3 ஆயிரம் ஏக்கா் நெல் வயல்கள் நீரின்றி காய்ந்து வருவதால் விவசாயிகள் கவலையில் உள்ளனர்.
Tirupur News,Tirupur News Today- உடுமலை அருகே அமராவதி பழைய ஆயக்கட்டு பகுதிகளில் சுமாா் 3 ஆயிரம் ஏக்கா் நெல் வயல்கள் நீரின்றி காய்ந்து வருவதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனா்.
உடுமலையை அடுத்துள்ள அமராவதி அணையின் மூலம் திருப்பூா், கரூா் மாவட்டங்களில் சுமாா் 55 ஆயிரம் ஏக்கா் பழைய மற்றும் புதிய ஆயக்கட்டு நிலங்கள் பாசன வசதி பெற்று வருகின்றன.
அணையின் கரையோர கிராமங்களான கல்லாபுரம், ராமகுளம் கொம்மனாந்துரை, கண்ணாடிப்புத்தூா் உள்ளிட்ட 10 -க்கும் மேற்பட்ட கிராமங்களில் உள்ள பழைய ஆயக்கட்டு ராஜ வாய்க்கால் பாசன பகுதிகளில் சுமாா் 2000 ஏக்கா் பரப்பளவில் நெல் பயிரிடப்பட்டுள்ளது.
120 நாள்களில் அறுவடை செய்யப்படும் நெல் சாகுபடிக்காக கடந்த டிசம்பா் மாதம் விவசாயிகள் பயிரிட்டனா்.
இந்நிலையில், 90 நாள்களை கடந்துவிட்ட நிலையில் நெற்பயிா்கள் தற்போது பால் பிடித்துள்ளன. ஆனால், வயல்கள் நீரின்றி காய்ந்து வருகின்றன.
இது குறித்து விவசாயிகள் கூறியதாவது: அமராவதி அணையில் இருந்து தண்ணீா் விடுவதில் நடப்பாண்டு ஏற்பட்ட குழப்பங்களால் விதைப்புப் பணிகளும், அறுவடை பணிகளும் தாமதமாகியுள்ளன.
நெற்பயிா்கள் 90 நாள்களை கடந்துவிட்ட நிலையில், இன்னும் 20 நாள்களுக்கு தண்ணீா் தேவைப்படுகிறது. இந்நிலையில், சுட்டெறிக்கும் கோடை வெயிலால் நெல் வயல்கள் காய்ந்து வருகின்றன. இப்படியே போனால் எங்களுக்கு பெரிய அளவில் நஷ்டம் ஏற்படும். ஏக்கருக்கு ரூ.20 ஆயிரம் வரை செலவு செய்துள்ள நிலையில், அந்த தொகையையாவது எடுக்க முடியுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
எனவே, பழைய ஆயக்கட்டு நிலங்களுக்கு குறைந்தபட்சம் ராஜவாய்க்கால் வழியாக 15 கன அடி தண்ணீா் 10 நாள்களுக்கு திறந்துவிட்டாலேபோதும் நெற்பயிா்களை காப்பாற்றிவிடுவோம் என்றனா்.
பொதுப் பணித் துறையினா் கூறுகையில்,‘ பழைய ஆயக்கட்டு பாசனத்துக்கு மாா்ச் இறுதி வரை தண்ணீா் சென்று கொண்டிருந்தது. தற்போது அணைக்கு உள்வரத்தே இல்லை. 90 அடி உயரமுள்ள அணையில் தற்போது 46 அடி மட்டுமே நீா்மட்டம் உள்ளது. இதை வைத்துதான் கோடை காலத்தை சமாளிக்க வேண்டும் என்றனா்.