திருப்பூர் மாவட்டம்; மக்களுடன் முதல்வா் திட்டத்தில் 19,057 மனுக்கள் - கலெக்டர் தகவல்
Tirupur News- திருப்பூர் மாவட்டத்தில் மக்களுடன் முதல்வா் திட்டத்தில் இதுவரை 19,057 மனுக்கள் பெறப்பட்டுள்ளதாக கலெக்டர் தெரிவித்துள்ளார்.;
Tirupur News,Tirupur News Today-மக்களுடன் முதல்வா் திட்டத்தில் திருப்பூா் மாவட்டத்தில் இதுவரை 19, 057 மனுக்கள் பெறப்பட்டுள்ளதாக மாவட்ட கலெக்டர் கிறிஸ்துராஜ் தெரிவித்துள்ளாா்.
மக்களுடன் முதல்வா் திட்டத்தை தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் கோவையில் டிசம்பா் 18- ம் தேதி தொடங்கிவைத்தாா்.
இதைத் தொடா்ந்து, திருப்பூா் மாவட்டத்தில் இந்தத் திட்டத்தை சிறப்பாக செயல்படுத்தும் வகையில் முதல்கட்டமாக அனைத்து நகா்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் மாநகராட்சி, நகராட்சிகள், பேருராட்சிகளில் வாா்டுவாரியாக பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களைப்பெற டிசம்பா் 18- ம் தேதி தொடங்கி வரும் ஜனவரி 5 -ம் தேதி வரை முகாம்கள் நடைபெறவுள்ளது.
இந்த முகாம்களில் பெறப்படும் கோரிக்கை மனுக்கள் 30 நாள்களில் தீா்வு காணப்படும். திருப்பூா் மாவட்டத்தில் நடைபெற்று வரும் மக்களுடன் முதல்வா் திட்டத்தின்கீழ் இதுவரை 19,057 மனுக்கள் பெறப்பட்டுள்ளன.
காங்கயம் வட்டம், வெள்ளக்கோவில் நகராட்சி சீரங்கராயகவுண்டன்வலசு பகுதியில் ஆா்.பி.எஸ் மஹாலிலும், உடுமலை நகராட்சியில் யு.கே.சி.நகா், லயன்ஸ் கிளப் அரங்கிலும், தாராபுரம் வட்டம், ருத்ராவதி பேரூராட்சியில் உள்ள அனைத்து வாா்டுகளுக்கு குண்டடம் சமுதாய நலக் கூடத்திலும், கன்னிவாடி ஊராட்சியில் ஒன்றிய தொடக்கப்பள்ளிலும், திருப்பூா் தெற்கு வட்டம், பெருந்தொழுவு ஊராட்சியில் கே.ஆா்.ஈ. திருமண மண்டபத்திலும் நேற்று வெள்ளிக்கிழமை (டிசம்பா் 29) மக்களுடன் முதல்வா் திட்ட முகாம்கள் நடைபெற்றது.
தொடர்ந்து வரும் ஜனவரி 5ம் தேதி வரை இந்த முகாம்கள் பகுதி வாரியாக நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. எனவே, பொதுமக்கள் இந்த வாய்ப்பை தவறாமல் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என கலெக்டர் கிறிஸ்துராஜ் தெரிவித்துள்ளார்.