தேசிய மக்கள் நீதிமன்றத்தில் 1,521 வழக்குகள்; ரூ.29.06 கோடிக்கு சமரசத் தீர்வு
Tirupur News,Tirupur News Today-திருப்பூர் மாவட்டத்தில் நடந்த தேசிய மக்கள் நீதிமன்றத்தில் 1,521 வழக்குகள் ரூ.29.06 கோடிக்கு சமரச தீர்வு காணப்பட்டது.;
Tirupur News,Tirupur News Today- திருப்பூர் முதன்மை மாவட்ட நீதிபதி மற்றும் திருப்பூர் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் தலைவர் ஸ்வர்ணம் நடராஜன் தலைமையில் நேற்று தேசிய மக்கள் நீதிமன்றம் திருப்பூர் மாவட்டம் முழுவதும் உள்ள கோர்ட் வளாகங்களில் நடைபெற்றது. திருப்பூர் மாவட்ட கோர்ட்டு வளாகத்தில் 8 அமர்வுகளும், அவினாசியில் 2, காங்கயத்தில் 2, உடுமலையில் 3, தாராபுரத்தில் 2, பல்லடத்தில் 2 என மொத்தம் 19 அமர்வுகளாக நடைபெற்றது.
திருப்பூர் வலையங்காட்டை சேர்ந்தவர் அமுதா கலைவாணி (வயது 37). இவர் கடந்த 8-9-2019 அன்று காரில் ஊதியூர் அருகே நாற்றான்காட்டு வலசு அருகே சென்றபோது, பின்னால் வந்த கார் மோதிய விபத்தில் முதுகுதண்டுவடத்தில் பாதிப்பு ஏற்பட்டு அவருக்கு கால்கள் செயலிழந்தன. சிகிச்சைக்கு பின் அவர் உயிர்பிழைத்தார். தனக்கு விபத்து இழப்பீடு கேட்டு திருப்பூர் மாவட்ட மோட்டார் வாகன விபத்து இழப்பீடு தீர்ப்பாயத்தில் முறையிட்டார்.
இந்த வழக்கு தேசிய மக்கள் நீதிமன்றத்தில் சமரசத்துக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. இதில் விபத்தை ஏற்படுத்திய கார் தரப்பில் பொதுத்துறை நிறுவனமான நியூ இந்தியா அசூரன்ஸ் நிறுவனம், அமுதா கலைவாணிக்கு ரூ.48 லட்சம் இழப்பீடு வழங்க சம்மதித்து அதற்கான காசோலையை நேற்று வழங்கியது. பாதிக்கப்பட்டவர் தரப்பில் வக்கீல் பழனிசாமி ஆஜரானார். இன்சூரன்ஸ் நிறுவனத்தின் தரப்பில் வக்கீல் மாணிக்கராஜ் ஆஜரானார்.
தேசிய மக்கள் நீதிமன்றத்தில் மொத்தம் 4 ஆயிரத்து 398 வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. அதில் 1,521 வழக்குகளுக்கு ரூ.29 கோடி 6 லட்சத்து 16 ஆயிரத்து 573 மதிப்பில் சமரச தீர்வு காணப்பட்டது. இதில் மோட்டார் வாகன விபத்து வழக்குகள் 303, சிவில் வழக்குகள் 57, காசோலை மோசடி வழக்குகள் 17, குடும்ப நல வழக்குகள் 7, சமரசத்துக்குரிய குற்ற வழக்குகள் 1,059, வங்கி வராக்கடன் வழக்குகள் 78 ஆகியவை அடங்கும்.
இதில் நிரந்தர மக்கள் நீதிமன்ற தலைவர் மற்றும் விரைவு மகளிர் நீதிமன்ற நீதிபதி பாலு, மோட்டார் வாகன விபத்து தீர்ப்பாய நீதிபதிஸ்ரீகுமார், முதலாவது கூடுதல் மாவட்ட நீதிபதி பத்மா, மாவட்ட குடும்ப நல நீதிபதி சுகந்தி, முதன்மை சார்பு நீதிபதி செல்லதுரை, முதன்மை மாவட்ட உரிமையியல் நீதிபதி கண்ணன், மாஜிஸ்திரேட்கள் கார்த்திகேயன், பாரதிபிரபா, பழனிகுமார், ரஞ்சித்குமார், வக்கீல்கள் பழனிசாமி, ரகுபதி, காப்பீட்டு நிறுவன அதிகாரிகள் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர்.